பெரம்பலூர்
கிடப்பில் போடப்பட்ட சாலை அமைக்கும் பணி
|கிடப்பில் போடப்பட்ட சாலை அமைக்கும் பணி குறித்து அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
பெரம்பலூர் அருகே கீழக்கரை-சோமண்டாபுதூர் சாலை மேற்கு புறம் காட்டு கொட்டகையை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் செந்தில்குமார் என்பவர் மாவட்ட கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் இருந்து சோமண்டாபுதூர் சாலையின் மேற்கு புறமாக ஆலம்பாடி செல்லும் சாலையின் உள்புறம் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் அந்தப்பகுதியில் 100 ஏக்கர் விவசாய விளை நிலங்கள் உள்ளது. மேலும் இந்த சாலையின் வழியாக ஆலம்பாடி மற்றும் நார்க்காரன் கொட்டாய் ஆகிய கிராமங்களுக்கு செல்ல முடியும். இந்த சாலையின் வழியாக தான் விவசாயிகள் தங்களது விளை நிலங்களுக்கு இடு பொருட்களையும், நிலத்தில் உற்பத்தியாகும் விளை பொருட்களையும் சந்தைக்கும் சென்று வருகிறார்கள். ஆனால் இந்த சாலை குண்டும், குழியுமாக மோசமாக காட்சியளித்தது. இதையடுத்து விவசாயிகள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் ரூ.67 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டு புதிய தார் சாலை அமைக்க கலெக்டர், எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் பூமி பூஜை போடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது தார் சாலை அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனால் மழைக்காலமான இப்போது இந்த சாலையை யாரும் பயன்படுத்த முடியவில்லை. எனவே கலெக்டர் கிடப்பில் போடப்பட்ட இந்த சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.