விருதுநகர்
6 பேர் பலியான கிராமத்தில் சாலை மறியல்
|சிவகாசி அருகே நடந்த பட்டாசு விபத்தில் 6 பேர் பலியான கிராமத்தில் நேற்று சாலைமறியல் நடந்தது. நிவாரண தொகையை உயர்த்தி வழங்க கோரிக்கை விடுத்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ரெங்கபாளையத்தி்ல் பட்டாசு விபத்தில் 13 பேர் உடல் கருகி பலியாகினர். இதில் வத்திராயிருப்பு அருகே உள்ள அழகாபுரி கிராமத்தில் மட்டும் 6 பேர் உயிரிழந்தனர்.
இந்தநிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண நிதி ரூ.3 லட்சம் போதுமானது அல்ல. எனவே விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அழகாபுரி சாலையில் அப்பகுதி மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் சிவகாசி சப்-கலெக்டர் விஸ்வநாதன், கூடுதல் துணை சூப்பிரண்டு அசோகன், வத்திராயிருப்பு தாசில்தார் முத்துமாரி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உங்களின் கோரிக்கை குறித்து கலெக்டரிடம் தெரிவித்து உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
அமைச்சர்கள் கணேசன், தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், கலெக்டர் ஜெயசீலன் ஆகியோர் நேரில் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தால் மட்டுமே உயிரிழந்தவர்களின் உடல்களை பெறுவோம். அதுவரை எங்களது போராட்டம் தொடரும் என அவர்கள் கூறினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலெக்டரை சந்திக்க விருதுநகர் சென்றனர். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோகன், துணை சூப்பிரண்டுகள் முகேஷ் ஜெயகுமார், பிரீத்தி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.