திருவள்ளூர்
சாலை விரிவாக்க பணியின் போது சேதமான குடிநீர் குழாயை சீரமைக்க கோரி பெண்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
|கும்மிடிப்பூண்டி அருகே சாலை விரிவாக்க பணியின் போது சேதமான குடிநீர் குழாயை சீரமைக்க வலியுறுத்தி பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் இருந்து ஆந்திர மாநிலம் சத்தியவேடு செல்லும் சாலையில், மாநில நெடுஞ்சாலை துறையினர் விரிவாக்க பணிகளை செய்து வருகின்றனர். இதன் காரணமாக கவரைப்பேட்டை பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சாலையோர விரிவாக்க பணிகள் நடைபெறும் போது அந்த பகுதியில் இருந்த குடிநீர் குழாய் எதிர்பாராத விதமாக துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு குடிநீர் சப்ளை முறையாக வழங்க முடியவில்லை. இந்த நிலையில், ஊராட்சி நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி, சாலை விரிவாக்க பணிகளை செய்து வரும் ஒப்பந்ததாரரின் சார்பில் குடியிருப்புவாசிகளுக்கு குடிநீரானது டேங்கர் லாரி மூலம் வழங்கப்பட்டு வந்தது. இருப்பினும், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது.
எனவே, துண்டிக்கப்பட்ட குழாயை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி நேற்று முன்தினம் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் கவரைப்பேட்டை - சத்யவேடு சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கவரைப்பேட்டை போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசி அவர்களை சாலையோரம் அழைத்து சென்றதால் போக்குவரத்து சீரானது.
தகவலறிந்து அங்கு வந்த மாநில நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் ஆண்டி, இன்னும் 2 நாட்களில் துண்டிக்கப்பட்ட பைப் லைன் சீரமைத்து தரப்படும் என உறுதி அளித்தார். இதனையடுத்து தங்களது போராட்டத்தை கைவிட்டு பெண்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டதால் சுமார் 1 மணி நேரம் அந்த பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.