கள்ளக்குறிச்சி
சின்னசேலத்தில் ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியல்
|நிறுத்துவதற்கு இடம் ஏற்படுத்திதரக்கோரி சின்னசேலத்தில் ஆட்டோ டிரைவர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சின்னசேலம்
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சின்னசேலம் போலீஸ் நிலைய சுற்றுச்சுவரை ஒட்டி அப்பகுதியை சேர்ந்த டிரைவர்கள் ஆட்டோக்களை நிறுத்தி ஓட்டி வந்தனர்.
ஆனால் போலீஸ் நிலையத்துக்கு புகார் கொடுக்க வருபவர்களின் வாகனங்களை நிறுத்த சிரமப்படுவதாலும், பஸ் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும் கருதிய போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சின்னசேலம் நகரத்தில் தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களில் ஆக்கிரமிப்புகள்அகற்றப்பட்டது.
இதையடுத்து கள்ளக்குறிச்சி பஸ் நிறுத்தி ஏற்றும் இடத்துக்கு பின்னால் ஆட்டோக்களை நிறுத்திக்கொள்ளும்படி போலீசார் தெரிவித்தனர். அதன்படி குறிப்பிட்ட இடத்தில் ஆட்டோக்களை ஓட்டுனர்கள் நிறுத்தி வந்தனர்.
சாலை மறியல்
இந்த நிலையில் நேற்று திடீரென சின்னசேலம் பேரூராட்சி அலுவலகம் முன்புறம் திரண்ட ஆட்டோ டிரைவர்கள் பழையபடி போலீஸ் நிலையத்தின் சுற்றுச்சுவரை ஒட்டி ஆட்டோக்களை நிறுத்திக் கொள்ள அனுமதிக்க கோரி பெட்ரோல் பாட்டிலுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த போலீசாா் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து தற்காலிகமாக போலீஸ் நிலைய சுற்றுச்சுவர் ஓரமாக ஆட்டோக்களை நிறுத்துவதற்கு அனுமதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.