< Back
மாநில செய்திகள்
விவசாயிகள் சாலை மறியல்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

விவசாயிகள் சாலை மறியல்

தினத்தந்தி
|
26 Sept 2023 1:45 AM IST

ஒரத்தநாடு அருகே கல்லணைக்கால்வாயில் பாசனத்துக்கு உடனடியாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஒரத்தநாடு:

ஒரத்தநாடு அருகே கல்லணைக்கால்வாயில் பாசனத்துக்கு உடனடியாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தண்ணீர் திறப்பு நிறுத்தம்

கல்லணைக்கால்வாய் நீரை நம்பி சுமார் 25 ஆயிரம் எக்டேர் நிலப்பரப்பளவில் விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்தநிலையில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக கல்லணைக் கால்வாயில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால் கதிர்விடும் தருவாயில் உள்ள நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகும் நிலை ஏற்பட்டது.

விவசாயிகள் சாலை மறியல்

எனவே உடனடியாக கல்லணைக் கால்வாயில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும். மேலும் தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரத்தநாடு அருகே செல்லம்பட்டியில் விவசாயிகள் நேற்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் சாலையில் படுத்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி கோஷமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியதாவது:-

கல்லணைக் கால்வாய் பாசன தண்ணீரை நம்பி சுமார் 25 ஆயிரம் எக்ேடர் நிலப்பரப்பளவில் குறுவை சாகுபடி செய்துள்ளோம். ஆனால் திடீரென தண்ணீர் நிறுத்தப்பட்டதால் பயிர்கள் அனைத்தும் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக கல்லணைக் கால்வாயில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும்.மேலும் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கூறினர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஒரத்தநாடு தாசில்தார் சுந்தரசெல்வி தலைமையிலான அதிகாரிகள் போலீசார் முன்னிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக சுமார் 1 மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்