தர்மபுரி
அம்பேத்கர் காலனியில் சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
|தர்மபுரி:
தர்மபுரி நகராட்சி 30-வது வார்டுக்குட்பட்ட அம்பேத்கர் காலனியில் சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
30-வது வார்டு
தர்மபுரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. நகரின் தெற்கு பகுதியில் 30-வது வார்டு அமைந்துள்ளது. இந்த வார்டில் அம்பேத்கர் காலனி, 3 குறுக்கு தெருக்கள், இ.பி. காலனி, அமுதம் காலனி, அந்தோணி காலனி, ஜி.எம். தியேட்டர் சாலை, எஸ்.வி. ரோடு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த வார்டில் 1,500-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. இங்கு 4,000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த வார்டில் 800 ஆண் வாக்காளர்களும், 960 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 1,760 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த வார்டில் 150 தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒரு குடிநீர் தொட்டி மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டில் ஏராளமான தனியார் மருத்துவமனைகள் உள்ளன. எந்தவித வளர்ச்சியும் இல்லாமல் மிகவும் பின்தங்கிய பகுதியாகவே இந்த வார்டு உள்ளது. ஆனால் இந்த வார்டு பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியாகும். உள்ளூர் மக்களை விட வெளியாட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த வார்டில் போதுமான அடிப்படை கட்டமைப்புகள் இல்லை என்பதே இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் குறையாகவே உள்ளது. அம்பேத்கர் காலனியில் ஒரு பகுதி மேடாகவும், மற்ற பகுதி தாழ்வாகவும் உள்ளது.
தார்சாலை
இந்த வார்டில் உள்ள அம்பேத்கர் காலனி, அமுதம் காலனி பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய்கள் தூர்வாரி பல ஆண்டுகள் ஆகிறது. சாக்கடை கால்வாய்கள் அமைத்து பல ஆண்டுகள் ஆகிறது. சேதமடைந்த சாலையால் இந்த பகுதி மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். மேலும் இந்த பகுதியில் நிலவும் தண்ணீர் பிரச்சினையால் பெண்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே தார்சாலை அமைக்கவும், புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் தொட்டிகள் அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வார்டில் பச்சியம்மன் கோவில் மயானம் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் உள்ளது. இரவு, பகல் எப்போது பார்த்தாலும் இந்த மயானத்துக்குள் சமூக விரோதிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து விட்டது. எனவே நகராட்சி நிர்வாகம் மயானத்துக்கு புதிய கேட் அமைத்து, காவலாளி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மொத்தத்தில் அம்பேத்கர் நகரில் சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா? என்று அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
மின் மோட்டார் வசதி
அம்பேத்கர் காலனியை சேர்ந்த சுப்பிரமணி:-
எங்கள் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி சார்பில் புதிய தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. ஒரு சில நாட்கள் மட்டுமே தண்ணீர் வந்த நிலையில் மின்மோட்டார் பழுதாகி தண்ணீர் வருவதில்லை. காட்சி பொருளாக உள்ள இந்த தண்ணீர் தொட்டியின் மூலம் பொதுமக்களுக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்ற தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான மின்மோட்டாரை சரி செய்ய வேண்டும். அம்பேத்கர் காலனி மற்றும் ஜி.எம். தியேட்டர் சாலை பழுதடைந்துள்ளது. எனவே இந்த பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும். எஸ்.வி. ரோட்டில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாக்கடை கால்வாய்கள்
அமுதம் காலனி குடியிருப்போர் நல சங்க நிர்வாகி ஜெகதீசன்:-
நகரின் எல்லை பகுதியில் உள்ள அமுதம் காலனி எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் புறக்கணிக்கப்படுகிறது. இந்த பகுதிக்கு வரும் பிரதான சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. ஒரு சில பகுதிகளில் புதிய தார்சாலை மட்டும் அமைக்கிறார்கள். ஆனால் சாக்கடை கால்வாய்கள் அமைக்கப்படுவது இல்லை. இதனால் மழைக்காலங்களில் சாக்கடை கால்வாய்களில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையும் சேதமடைந்து விடுகிறது. எனவே எங்கள் பகுதியில் புதிய சாக்கடை கால்வாய்கள் அமைக்க வேண்டும். சேலம் மெயின் ரோட்டில் இருந்து அமுதம் காலனிக்கு வரும் இணைப்பு சாலையில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும். சேதமடைந்த சாலைகளை புதுப்பித்து முக்கிய சாலை சந்திப்புகளில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.
கொசு மருந்து
அம்பேத்கர் காலனியை சேர்ந்த ஜெயலட்சுமி:-
அம்பேத்கர் காலனியில் உள்ள பெரும்பாலான தெருக்களில் உள்ள சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும். தெருவிளக்குகளை முறையாக பராமரிக்க வேண்டும். அம்பேத்கர் நகரில் முக்கிய சாலை சந்திப்புகளில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும். தினமும் குப்பைகளை அகற்ற வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி எங்கள் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.