< Back
மாநில செய்திகள்
தர்மபுரி நகராட்சி 14-வது வார்டில் தரமற்ற சாலைகளால் தடுமாறும் மக்கள் சீரமைக்கப்படுமா?
தர்மபுரி
மாநில செய்திகள்

தர்மபுரி நகராட்சி 14-வது வார்டில் தரமற்ற சாலைகளால் தடுமாறும் மக்கள் சீரமைக்கப்படுமா?

தினத்தந்தி
|
6 March 2023 12:30 AM IST

தர்மபுரி நகராட்சி 14-வது வார்டில் தரமற்ற சாலைகள் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

எம்.ஜி.ஆர். நகர்

தர்மபுரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இவற்றில் மிகவும் பின்தங்கிய பகுதியாக 14-வது வார்டு அமைந்துள்ளது. எம்.ஜி.ஆர். நகர் என்று அழைக்கப்படும் இந்த வார்டில் கருமாரி அம்மன் கோவில் தெரு, மசூதி தெரு, பன்னியாண்டிகள் தெரு, அண்ணா நகர், முத்து மாரியம்மன் கோவில் தெரு, ஏரிக்கரை ரோடு, எம்.ஜி.ஆர். நகர் பிரதான சாலை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட சாலைகள் மற்றும் ஏராளமான குறுக்கு சந்துகள் உள்ளன. இந்த வார்டில் மொத்தம் 542 வீடுகள் உள்ளன. 3,200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த வார்டில் 1,038 ஆண் வாக்காளர்களும், 1,066 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 2,104 வாக்காளர்கள் உள்ளனர்.

தர்மபுரி நகரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இந்த வார்டில் சுமார் 130 தெருவிளக்குகளும், 4 குடிநீர் தொட்டிகளும் உள்ளன. இந்த வார்டில் உள்ள சாலைகள் அனைத்தும் குறுகலாக உள்ளது. எம்.ஜி.ஆர். நகர் பிரதான சாலை கடந்த 15 ஆண்டுகளாக தார்சாலைக்காக ஏங்கி வருகிறது.

குறுகலான சாலைகள்

சாலைகள் அனைத்தும் தரமற்ற சாலையாகவே உள்ளது. குறிப்பாக இந்த பகுதிக்கு வரவேண்டும் என்றால் ரெயில்வே சுரங்கப்பாதை வழியாக சிறிய கார்கள், ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் தான் வர வேண்டிய சூழல் நிலவுகிறது. லாரி, வேன், பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் பிடமனேரி, பென்னாகரம் ரோடு, சத்யா நகர் வழியாக சென்று தான் இந்த பகுதிக்கு வர முடியும்.

இந்த பிரச்சினையால் அந்த பகுதியில் யாரும் வாடகைக்கு குடியிருக்க கூட முன்வருவதில்லை. பெரும்பாலான சாலைகள் குறுகலாக உள்ளதால் கனரக வானங்கள் சென்றுவர இயலாது நிலை உள்ளது. சாலைகள் மிகவும் பழுதடைந்து காணப்படுவதால் கனரக வாகனங்களை எடுத்து வர டிரைவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

அடிப்படை வசதிகள்

எம்.ஜி.ஆர். நகர் பகுதி நீர்நிலை புறம்போக்கு பகுதியாக உள்ளதால் இப்பகுதி மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா கேட்டு போராடி வருகின்றனர். வீடுகளுக்கு உரிய பட்டா இல்லாததால் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்கள் குறுகலாக உள்ளதால் மழைக்காலங்களில் கழிவுநீர் வெளியேறி வீடுகளுக்குள் புகுந்து சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. சாக்கடை கால்வாய்களை உடனடியாக தூர்வார வேண்டும். தண்ணீர் தேவைக்கு மின் மோட்டாருடன் கூடிய குடிநீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக எம்.ஜி.ஆர். நகர் பிரதான சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கடந்த 15 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக அந்த பகுதி பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

வீட்டுமனை பட்டா

அண்ணா நகரை சேர்த்த மளிகை கடை உரிமையாளர் கோவிந்தசாமி:-

தர்மபுரி நகரில் மிகவும் பின்தங்கிய பகுதியாகவே 14-வது வார்டு உள்ளது. நகரின் மற்ற பகுதிகளை காட்டிலும் இந்த பகுதியில் சுகாதார தொழிலாளர்கள், அன்றாடம் கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக எம்.ஜி.ஆர். நகர் பகுதி மக்களுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு போராடி வருகிறோம்.

தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு இந்த பகுதி மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். எம்.ஜி.ஆர். நகர் பிரதான சாலை ஆக்கிரமிப்பில் சிக்கி தவிக்கிறது. இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிய தார்சாலை அமைக்க வேண்டும். இந்த பகுதியில் உள்ள ரெயில்வே சாலை சுரங்கப்பாதை அமைந்துள்ள பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

தெருவிளக்குகள்

கருமாரிஅம்மன் கோவில் தெருவை சேர்ந்த வணிகர் சரவணன்:-

இந்த வார்டில் உள்ள பெரும்பாலான சாலைகள் மிகவும் குறுகலான சாலைகள். இதில் உள்ள சாக்கடை கால்வாய்கள் கட்டி பல ஆண்டுகள் ஆகிறது. இந்த சாக்கடை கால்வாய்கள் தூர்வாரி பல மாதங்கள் ஆகிறது. சாலைகளும் சீரமைக்கப்படாமல், சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்படாமல் இருப்பதால் கடந்த மழைக்காலங்களில் நாங்கள் பட்ட சிரமம் யாருக்கும் வரக்கூடாது.

அந்த அளவுக்கு நாங்கள் பாதிப்படைந்தோம். சாக்கடை கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் தொல்லை அதிகரித்து விட்டது. மொத்தத்தில் இந்த வார்டில் அடிப்படை வசதிகளுக்காக பொதுமக்கள் ஏங்கும் நிலை உள்ளது. சாலை சந்திப்புகளில் கூடுதல் தெருவிளக்குகளை அமைக்க வேண்டும்.

சத்துணவு கூடம்

எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த இல்லத்தரசி காவேரியம்மாள்:-

இந்த பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சத்துணவு கூடத்திற்கு தினமும் சுமார் 50 குழந்தைகள் வருகின்றனர். இந்த சத்துணவு கூடத்தை புதுப்பிக்க வேண்டும். இந்த பகுதியில் ஒரு சமுதாயக் கூடமும் உள்ளது. இந்த சமுதாயக்கூடமும் நாகரிக காலத்துக்கு ஏற்றார் போல் மாற்றம் செய்யப்பட வேண்டும். இந்தப் பகுதியில் தண்ணீர் தேவைக்கு கூடுதலாக 4 குடிநீர் தொட்டிகளை அமைக்க வேண்டும். இந்தப் பகுதியில் சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். மிகவும் பின்தங்கிய பகுதியான இந்த எம்.ஜி.ஆர். நகருக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்ற நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்