< Back
மாநில செய்திகள்
சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளதால் பொதுமக்கள் அவதி
திருப்பூர்
மாநில செய்திகள்

சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளதால் பொதுமக்கள் அவதி

தினத்தந்தி
|
24 Feb 2023 11:00 PM IST

உடுமலை அருகே சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளதால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை உள்ளது.

உடுமலை அருகே சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளதால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை உள்ளது.

தார்ச்சாலை

உடுமலையை அடுத்த பழனியாண்டவர் நகர் ரவுண்டானாவிலிருந்து கண்ணமநாயக்கனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை மிக மோசமாக சேதமடைந்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

'பழனி ஆண்டவர் நகர் ரவுண்டானா பகுதியை ஒட்டி உடுமலை நகராட்சி எல்லை முடிவடைந்து கிராம ஊராட்சி தொடங்குகிறது. இந்த சாலை ஜீவாநகர் வழியாக பல குடியிருப்புப் பகுதிகளைக் கடந்து கண்ணமநாயக்கனூர் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர பி.ஏ.பி. வாய்க்கால் கரை வழியாக அரசுக்கல்லூரி, எஸ்.வி புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மக்களும் விவசாயிகளும் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். இதனால் அதிக எண்ணிக்கையில் விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்தும் சாலையாக இது உள்ளது.

விபத்துகள்

இந்த சாலையில் நகராட்சி எல்லை வரை தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து உள்ள சாலை தார்ச்சாலையாக இருந்தது என்பதையே அங்கங்கே திட்டுத்திட்டாக கருப்பு நிறம் தெரிவதை வைத்துதான் முடிவு செய்ய வேண்டியதுள்ளது. அந்த அளவுக்கு குண்டும் குழியாகவும், சாலையெங்கும் மண் படர்ந்து காணப்படுகிறது.

இதனால் வாகனங்கள் செல்லும்போது புழுதி பறப்பதால் அருகிலுள்ள வீடுகளில் உள்ள உணவுப் பொருட்கள் வீணாகும் நிலை உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு பலவிதமான சுவாசக்கோளாறுகளும் ஏற்படுகிறது. மழைக்காலங்களில் ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்குவதுடன் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் இந்த பகுதி வழியாக செல்பவர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கும் நிலை உள்ளது. எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்