திருப்பூர்
ரோட்டில் கிடக்கும் மணற்குவியலால் விபத்து அபாயம்
|திருப்பூர் டவுன்ஹால் அருகே ரெயில்வே மேம்பால ரோட்டில் மணற்குவியல் கிடக்கிறது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
திருப்பூர் டவுன்ஹால் அருகே ரெயில்வே மேம்பால ரோட்டில் மணற்குவியல் கிடக்கிறது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
வாகன ஓட்டிகள் அவதி
திருப்பூர் டவுன்ஹால் பகுதியில் இருந்து ரெயில்வே மேம்பாலம் செல்லும் வழியில் ரவுண்டானா உள்ளது. தற்போது இந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் பாலத்தின் ஒரு பகுதியில் மைய தடுப்பு சுவர் இடிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இங்கு பாலத்திற்கு செல்லும் ரோட்டில் அதிக அளவில் மணல் பரவி மணற்குவியலாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டி செல்வதற்கு சிரமப்படுகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறியபடி வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். சற்று கவனம் தவறினாலும் வாகன ஒட்டிகள் மணலில் சறுக்கி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
விபத்து அபாயம்
மாநகரின் வாகன போக்குவரத்தில் இந்த ரோடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் தினமும் ஏராளமான வாகனங்கள் இவ்வழியாக செல்கின்றன. இடைவிடாமல் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக செல்வதால், ஏதேனும் வாகனம் மணலில் சறுக்கினால் கீழே விழும் வாகன ஓட்டிக்கு பின்னால் வரும் வாகனத்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. குழந்தைகளுடன் குடும்பமாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் அச்சத்துடன் வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். எனவே, வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பான பயணம் அமைய ரோட்டில் கிடக்கும் மணற்குவியல் விரைவாக அப்புறப்படுத்தப்படுமா?.