< Back
மாநில செய்திகள்
திருமணங்களுக்கு தடையாக சேதமான கிராம சாலைகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

திருமணங்களுக்கு தடையாக சேதமான கிராம சாலைகள்

தினத்தந்தி
|
13 Oct 2022 11:19 PM IST

தொண்டி அருகே கிராம சாலைகள் சேதமானதால் திருமணங்களுக்கு தடையாக இருப்பதாகவும், பெண் கொடுக்க, எடுக்க மறுப்பதாக கிராமமக்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

தொண்டி,

தொண்டி அருகே கிராம சாலைகள் சேதமானதால் திருமணங்களுக்கு தடையாக இருப்பதாகவும், பெண் கொடுக்க, எடுக்க மறுப்பதாக கிராமமக்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

2 கிராமங்கள்

திருவாடானை தாலுகா தளிர் மருங்கூர் ஊராட்சியை சேர்ந்தது விசுவநாதஏந்தல், கூத்தனேந்தல் கிராமங்கள். இங்கு 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு பெருமானேந்தல் கிராமத்தில் உள்ள தொண்டி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும்.

கிராமங்களுக்கு செல்லும் தார்ச்சாலை நீண்ட காலத்திற்கு முன்பு அமைக்கப்பட்டதால் இந்த சாலை சேதம் அடைந்து பல ஆண்டுகளாகியும் இதுநாள்வரை புதிய சாலை அமைக்கப்படவில்லை. குடிநீர் வசதியும் இல்லை என்று கிராமமக்கள் புகார் கூறுகின்றனர்.

தரைப்பாலம்

இதுகுறித்து தளிர்மருங்கூர் ஊராட்சி தலைவர் ராமநாதன் கூறியதாவது:- விசுவநாதஏந்தல், கூத்தனேந்தல் கிராமங் களுக்கு செல்லும் தார்ச்சாலை சுமார் 20 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. யூனியன் நிர்வாகத்தின்கீழ் உள்ள இந்த சாலையில் பெருமானேந்தல், விசுவநாதஏந்தல், கூத்தனேந்தல் கிராமங்கள் மட்டுமல்ல அருகில் உள்ள கருங்காலக்குடி கிராமமக்களும் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சாலை சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்து விட்ட நிலையில் பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை தற்போது நிலவி வருகிறது.

இந்த சாலையின் குறுக்கே மணிமுத்தாறு கால்வாய் செல்வதால் அதில் அமைக்கப்பட்டு உள்ள தரைப்பாலமும் முற்றிலுமாக சேதம் அடைந்து விட்டது.

இதனால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு பெரிதும் பாதிப்பாக இருந்து வருகிறது. சாலையில் சில மணி நேரத்தில் செல்லும் இடங்களுக்கு சாலை சேதமடைந்து இருப்பதால் பல மைல் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

புதிய சாலை

இந்த சாலையை புதிய தார்ச்சாலையாக அமைத்துதர வேண்டும் என தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனுக்கள் நேரிலும் தபால் மூலமாக அளித்தும் இதுநாள் வரை இந்தபகுதி மக்களின் கோரிக்கை தீர்க்கப்படாமல் இருந்து வருகிறது.

இதுகுறித்து யூனியன் தலைவர் ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளப்படாமல் இருந்து வருகிறது.

எனவே தமிழக அரசுதான் இந்தபகுதி மக்களின் நிலையை உணர்ந்து இச்சாலையை புதிய தார் சாலையாக அமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கூத்தனேந்தல் கிராமம் மீனாள்: விசுவநாதஏந்தல், கூத்தனேந்தல் கிராமங்களுக்கு செல்லும் சாலை பல வருடமாக முற்றிலும் சேதம் அடைந்து கிடப்பதால் எங்கள் கிராமத்தில் இருந்து கர்ப்பிணிகளை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்ல முடியவில்லை. பிரசவ வலி ஏற்பட்டால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வாகனங்கள் ஊருக்கும் வர முடியவில்லை. வேறு ஏதாவது அவசர சூழ்நிலை ஏற்பட்டாலும் எந்தவித வாகனமும் ஊருக்கும் வர முடியாத நிலை இருந்து வருகிறது.

குறிப்பாக எங்கள் ஊருக்கு பெண் எடுக்கவும், பெண் கொடுக்கவும் யாரும் வருவதில்லை. கேட்டால் நடக்க ரோடும் இல்லை. குடிக்க தண்ணீரும் இல்லை என்று ஏளனமாக பேசுகிறார்கள். எனவே தமிழக அரசும் மாவட்ட கலெக்டரும் எங்கள் கிராமங்களுக்கு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய தார்சாலை அமைத்து தர வேண்டும்.

போக்குவரத்து துண்டிப்பு

விசுவநாதஏந்தல் கிராமத்தை சேர்ந்த பழனியம்மாள்: எங்கள் கிராமங்களுக்கு செல்லும் சாலை நீண்ட காலமாக சேதமடைந்து கிடப்பதால் சிலிண்டர் வாகனம் கூட எங்கள் ஊருக்கு வருவதில்லை. மணிமுத்தாறின் குறுக்கே உள்ள பாலமும் சேதம் அடைந்து கிடப்பதால் எந்த வாகனமும் வர முடியாத அளவிற்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு கிடக்கிறது. கடைசியாக கோரிக்கை மனு அளித்து 15 நாட்கள் காத்திருப்பது என்றும் சரியான முறையில் தீர்வு கிடைக்கா விட்டால் மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்துள்ளோம்..

பெருமானேந்தல் கிராம விவசாயி சேதுராஜன்: எங்கள் கிராமத்தில் உள்ள சுமார் 300 குடும்பங்களுக்கு விவசாய நிலங்கள் விசுவநாதஏந்தல், கூத்தனேந்தல் கிராமங்களில் தான் உள்ளது. இந்த சாலையில் சென்றுதான் எங்கள் கிராம மக்கள் விவசாய பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த சாலை முற்றிலுமாக சேதம் அடைந்து உர மூடைகள், விவசாய இடு பொருட்களை தலைச் சுமையாகவே நீண்ட தூரம் கொண்டு செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். பலமுறை அரசாங்கத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துவிட்டோம்.

ஊர் கூட்டம்

இந்த சாலையை புதிய சாலையாக அமைத்து தருவது குறித்து யாரும் கண்டு கொள்வதில்லை. எனவே கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிறைவேற்றி தராத பட்சத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்று 3 கிராமங்களும் சேர்ந்து ஊர் கூட்டம் போட்டு முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
மேலும் செய்திகள்