< Back
மாநில செய்திகள்
உயிர்பலி வாங்கும் சாலையாக மாறிய ஊத்தங்கரை-அரூர் தேசிய நெடுஞ்சாலை  வளைவுகளில் தடுப்பு சுவர்கள் அமைக்கப்படுமா?
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

உயிர்பலி வாங்கும் சாலையாக மாறிய ஊத்தங்கரை-அரூர் தேசிய நெடுஞ்சாலை வளைவுகளில் தடுப்பு சுவர்கள் அமைக்கப்படுமா?

தினத்தந்தி
|
1 Oct 2022 12:15 AM IST

உயிர்பலி வாங்கும் சாலையாக மாறிய ஊத்தங்கரை-அரூர் தேசிய நெடுஞ்சாலை வளைவுகளில் தடுப்பு சுவர்கள் அமைக்கப்படுமா?

ஊத்தங்கரை:

உயிர்பலி வாங்கும் சாலையாக மாறிய ஊத்தங்கரை-அரூர் தேசிய நெடுஞ்சாலையில் வளைவுகளில் தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தேசிய நெடுஞ்சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இருந்து அரூர், சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. புதிதாக இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஊத்தங்கரை எல்.ஐ.சி. சாலை, திப்பம்பட்டி, வெப்பாலம்பட்டி, அனுமன்தீர்த்தம் போன்ற பகுதிகள் இந்த சாலையின் அருகில் அமைந்துள்ளன.

இந்த பகுதியில் உள்ள சாலைகளில் வளைவுப்பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அபாயகரமான வளைவு பகுதி, விபத்து பகுதி என்ற வாசகங்கள் அடங்கிய போக்குவரத்து எச்சரிக்கை பலகைகள் எதுவும் அமைக்கப்படவில்லை.

தடுப்பு சுவர்கள்

மேலும் குக்கிராமங்களுக்கு பிரியும் பிரிவு சாலைகளில் முறையாக வளைவு சாலைகள் அமைக்கப்படவில்லை. இதனால் நாள்தோறும் அதிவேகமாக செல்ல கூடிய வாகனங்களால் விபத்துகளும், உயிர்சேதமும் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக பொதுமக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில், பள்ளிகள் உள்ள பகுதிகளில் தடுப்பு சுவர்கள், பேரிகார்டுகள் போன்றவை அமைக்காததன் காரணமாக அதிக அளவில் விபத்துக்கள் நடக்கின்றன.

மேலும் ஊத்தங்கரையை அடுத்த ஒன்னங்கரை காப்பு காடு இந்த சாலையையொட்டி அமைந்துள்ளது. இந்த காட்டில் ஏராளமான புள்ளிமான்கள் மற்றும் வன விலங்குகள் உள்ளன. இவை இரவு நேரத்தில் சாலையை கடக்கும் போது விபத்தில் சிக்குகின்றன.

விபத்துக்கள்

குறிப்பாக ஊத்தங்கரை எல்.ஐ.சி. சாலை அருகே உள்ள பிரிவு சாலையில் பல்வேறு கிராமங்களில் இருந்து வரக்கூடிய பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பஸ் ஏறி செல்கின்றனர். அந்த பகுதியில் தடுப்பு சுவர் இல்லாததால் விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. மேலும் வெப்பாலம்பட்டியில் சாலையோரத்தில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த இடத்திலும் பேரிகார்டு அமைக்க வேண்டும்.

மேலும் தண்ணீர்பந்தல் பிரிவு சாலை அருகில் ஒரு வளைவு சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். கடந்த மாதம் இந்த பகுதியில் திருமண வீட்டார் சென்ற வேன் கவிழ்ந்த விபத்தில் ஒரு பெண் பலியானார். 9 பேர் காயம் அடைந்தனர்.

மேலும் வெப்பாலம்பட்டியில் பள்ளி, கல்லூரி பஸ்கள் மோதிய விபத்தில் பல மாணவ, மாணவிகள் காயம் அடைந்தனர். இதே போல அனுமன்தீர்த்தம் பகுதியில் தொடர் விபத்துகள் நடந்து வருகின்றன.

உயிர்பலி வாங்கும் சாலையாக மாறிய ஊத்தங்கரை-அரூர் தேசிய நெடுஞ்சாலையில் வளைவுகளில் தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

குறிப்பாக ஊத்தங்கரை அனுமன்தீர்த்தம் பகுதியில் எல்.ஐ.சி. சாலை மற்றும் திப்பம்பட்டி சாலை, தண்ணீர் பந்தல் பிரிவு சாலை, ஒன்னங்கரை காப்பு காடு, வெப்பாலம்பட்டி கிராமம் ஆகிய பகுதிகளில் வளைவு சாலைகள், பேரிகார்டுகள், தடுப்பு சுவர்கள் அமைத்து தந்து, விபத்துக்களை குறைத்திட வேண்டும் என்பதே அந்த பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்