திருவள்ளூர்
ஆர்.கே. பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பெண் படுகாயம்
|ஆர்.கே. பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் பெண் படுகாயமடைந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம் சோமா சமுத்திரம் கிராமத்தில் வசித்து வருபவர் ஜெய்சங்கர் (வயது 48). இவரது மனைவி பிரியா (31). இவர் தன்னுடைய மகளுடன் மோட்டார் சைக்கிளில் பள்ளிப்பட்டுக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது ஆர்.கே.பேட்டை சூப்பர் மார்க்கெட் அருகே எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பிரியாவை சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதன்பிறகு வேலூர் அருகம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து அவரது கணவர் ஜெய்சங்கர் ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.