திருவள்ளூர்
ஆர்.கே. பேட்டையில் வேளாண் துறை கமிஷனர் ஆய்வு
|ஆர்.கே. பேட்டையில் வேளாண் துறை கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஜி.சி.எஸ். கண்டிகை ஊராட்சியில் தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை, உழவர் துறை, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம், தோட்டக்கலை, மலை பயிர்கள் துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகள் மற்றும் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். வேளாண் துறை கமிஷனர் சமய மூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மேற்கண்ட துறை அதிகாரிகளுடன் அவர் ஆய்வு மேற்கொண்டார். ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் தோட்டக்கலை துறை, வேளாண்மை துறை மூலமாக வழங்கிய திட்டங்கள் குறித்தும் விவரங்களை கேட்டறிந்தார். விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மானியங்கள் குறித்தும் அதிகாரிகளிடத்தில் அவர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
நிகழ்ச்சியின் போது வேளாண் துறை கமிஷனர் சமயமூர்த்தி அதிகாரிகளிடத்தில் பயனாளிகள் பட்டியல் விவரம் கேட்டபோது வேளாண்மை துறை அதிகாரிகள் கையில் அதற்குண்டான கோப்புகளை எடுத்து வராததால் அதிர்ச்சி அடைந்தனர். பயனாளிகள் பட்டியல் இல்லாமல் எப்படி நீங்கள் பயனாளிகளை தேர்வு செய்தீர்கள் என்று வேளாண்மை அதிகாரிகளை பார்த்து அவர் கேள்வி எழுப்பினார். இதனால் அதிகாரிகள் அதிர்ச்சியில் பேச முடியாமல் திகைத்து போய் நின்றனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.