திண்டுக்கல்
இடிந்து விழும் அபாயத்தில் ஆற்றுப்பால தடுப்புச்சுவர்
|பழனி அருகே இடிந்து விழும் அபாயத்தில் ஆற்றுப்பால தடுப்புச்சுவர் உள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சண்முகநதி ஆற்றுப்பாலம்
பழனியை அடுத்த மானூரில், சண்முகநதியின் குறுக்கே ஆற்றுப்பாலம் உள்ளது. பழனியில் இருந்து மானூர், கோரிக்கடவு, நரிக்கல்பட்டி சுற்றுப்புற பகுதிகள் மற்றும் தாராபுரம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட வெளியூருக்கு செல்லும் வாகனங்கள் இந்த ஆற்றுப்பாலம் வழியாகவே சென்று வருகின்றன.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த மானூர் ஆற்றுப்பாலத்தின் தடுப்புச்சுவர் மற்றும் தூண்கள் பல்வேறு இடங்களில் சேதம் அடைந்து காணப்படுகிறது. குறிப்பாக பாலத்தின் பல பகுதியில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து விட்டது. மேலும் பாலத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன.
இடிந்து விழும் அபாயம்
பாலம் சேதம் அடைந்துள்ளதால், அந்த வழியாக செல்ல வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். எனவே இந்த ஆற்றுப்பாலத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்து போதிய பராமரிப்பு செய்ய வேண்டும் அல்லது புதிய பாலம் அமைக்க வேண்டும்.
இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுக்கள் கூறுகையில், மானூர் ஆற்றுப்பாலத்தின் பல இடங்களில் தடுப்புச்சுவர் முற்றிலும் சேதமாகி இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதேபோல் பாலத்தில் மரக்கன்றுகள் வளர்ந்து உள்ளதால் விரிசல் அதிகமாகி வருகிறது.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தற்போது திருப்பூர், ஈரோடு, சேலம் பகுதியை சேர்ந்த பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வர தொடங்கி உள்ளனர். இவர்கள் மானூர் ஆற்றுப்பாலம் வழியாகத்தான் பழனிக்கு வருகை தருகின்றனர். எனவே பொதுமக்கள், பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு மானூர் ஆற்றுப்பாலத்தை ஆய்வு செய்து பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என்றனர்.