ராணிப்பேட்டை
விற்பனை செய்த நெல்மூட்டைகளுக்கு ஒரு மாதமாகியும் பணம் வழங்காத அவலநிலை
|காவேரிபாக்கம் வட்டாரத்தில் உள்ள அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்த நெல் மூட்டைகளுக்கு ஒரு மாதமாகியும் பணம் வழங்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
காவேரிப்பாக்கம்
காவேரிபாக்கம் வட்டாரத்தில் உள்ள அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்த நெல் மூட்டைகளுக்கு ஒரு மாதமாகியும் பணம் வழங்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்
காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் சம்பா பருவத்தில் பயிரிட்டுள்ள விவசாயிகள், தற்போது நெல் அறுவடை செய்து வருகின்றனர். தங்கள் விளைநிலங்களில் விளைந்த நெல்லை மணிகளை, அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் வியாபாரிகளிடம் நெல் மூட்டைகளை விற்பனை செய்வதில்லை. இதன்காரணமாக விவசாயிகளுக்கு ஒரளவு லாபம் ஈட்டி வருகின்றனர்.
தற்போது காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் சிறுகரும்பூர், சிறுவளையம், ஆயர்பாடி, காவேரிப்பாக்கம், சேரி, பாணாவரம், உள்ளிட்ட இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஒரு நாளைக்கு 40 கிலோ எடைகொண்ட ஆயிரம் மூட்டைகள் எடைப்போடப்பட்டு வருகிறது.
பணம் வழங்க வில்லை
இந்த நிலையில் காவேரிப்பாக்கத்தை அடுத்த சேரி ஊராட்சியில் நடைபெற்று வரும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் இருந்து வாங்கிய நெல் மூட்டைகளுக்கு ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் பணம் தரவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் கேட்டபோது சரியான பதில் கூறவில்லை என விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.
இதே போல் காவேரிப்பாக்கம் ஒன்றியங்களில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் இது போன்ற புகார் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு நெல் மூட்டைகளை விற்பனை செய்த விவசாயிகளுக்கு உடனே பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
----
Reporter : P. TAMILMANI Location : Vellore - KAVERIPAKKAM