அரியலூர்
வேகத்தடைகளை மீண்டும் அமைக்காததால் விபத்துகள் ஏற்படும் அபாயம்
|வேகத்தடைகளை மீண்டும் அமைக்காததால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்த இடங்களை பார்வையிட கடந்த நவம்பர் மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார். இதையொட்டி ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பாகவும், அதேபோல் சின்னவளையம் ஏரிக்கு அருகே மற்றும் பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்த வேகத்தடைகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.
பின்னர் 5 மாதங்கள் ஆகியும் அந்த பகுதிகளில் மீண்டும் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக பள்ளி முன்பாக அமைக்கப்பட்டிருந்த 2 வேகத்தடைகளால், மாணவர்கள் பள்ளிக்கு பாதுகாப்பாக சென்று வந்தனர். தற்போது வேகத்தடை இல்லாததால் அந்த வழியாக வாகனங்கள் வேகமாக வருகின்றன.
மீண்டும் அமைக்க கோரிக்கை
இதனால் மாணவ, மாணவிகள் பள்ளி நேரங்களில் பள்ளிக்கு செல்வதற்கும், பள்ளி முடிந்த பின்னர் சாலையை கடந்து வருவதற்கும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் மாணவ, மாணவிகள் மீது வேகமாக வரும் வாகனங்கள் மோதியதில், அவர்கள் காயமடைந்து மருத்துவமனைக்கு சென்று திரும்பிய சம்பவம் நடந்துள்ளது. வேகத்தடை அமைப்பது குறித்து அதிகாரியிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மாணவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ேமலும் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க ஏற்கனவே வேகத்தடை இருந்த இடங்களில் மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.