வெப்பத்தின் அளவு அதிகரிப்பு: பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும்- ஜி.கே.வாசன்
|தமிழக அரசு பள்ளி மாணவர்களின் ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னை,
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,
தமிழக அரசு மாநிலத்தில் நிலவும் கோடைக்கால வெயிலின் தாக்கத்தில் இருந்து பள்ளி மாணவச் செல்வங்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.தற்போதைய கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே போகிறது.வெயிலால் சில நேரம் வெப்பமும், சில நேரம் கடும் வெப்பமும் பொதுமக்களையும், கால்நடைகளையும் பாதிக்கிறது.
எனவே வெயில் காலமான இப்பொழுது மாநிலத்தின் பலப்பகுதிகளில் மக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். நிலவும் கடுமையான வெப்பத்தால் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியோர் என அனைத்து தரப்பினரும் அவர்களது பணிகளில் சரிவர ஈடுபட முடியவில்லை. அது மட்டுமல்ல குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு தேவையான குடிநீர் கிடைப்பதில் தடை ஏற்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன.மேலும் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நிலவும் அதிக வெப்பநிலையால் மாணவர்கள், மாணவிகள், பெண்கள், முதியோர் மயங்கி விழுந்ததும், சில இடங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டதும் வருத்தத்துக்குரியது.குறிப்பாக டெல்லி உள்ளிட்ட பல வட மாநிலப்பகுதிகளில் வெப்ப அலை வீசுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட வேண்டிய சூழலில் வெளி மாநிலங்களில் வெப்ப நிலை சுமார் 50 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.எனவே தமிழக அரசு பள்ளிச்செல்லும் பிள்ளைகளின் ஆரோக்கியத்தையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் கவனத்தில் கொண்டு ஜூன் 6-ந்தேதி பள்ளிகளில் வகுப்புகளை தொடங்குவதற்கு பதிலாக ஒருவார காலம் தள்ளி வகுப்புகளை தொடங்க ஆலோசனை செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.