உயர்ந்துவரும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் - நாளை உபரி நீர் திறப்பு
|செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் நாளை உபரி நீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்,
சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியானது 25.51 சதுர கி.மீ பரப்பளவில் குன்றத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24.00 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகும். இன்று ஏரியில் நீர் இருப்பு 21.96 அடியாகவும் கொள்ளளவு 3,110 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.
இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து விநாடிக்கு 231 கன அடியாக உள்ளது. தற்போது ஏரிக்கு வரும் நீர் வரத்தினால் 22 அடியை எட்டுவதாலும், ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை காலை (08.10.2023) 10.00 மணி அளவில் விநாடிக்கு வெள்ளநீர் போக்கி வழியாக 100 கனஅடி உபரி நீர் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
எனவே ஏரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.