< Back
மாநில செய்திகள்
உலக சந்தையில் அரிசி விலை உயர்வு
விருதுநகர்
மாநில செய்திகள்

உலக சந்தையில் அரிசி விலை உயர்வு

தினத்தந்தி
|
8 Sep 2023 11:40 PM GMT

இந்தியாவில் இருந்து ஏற்றுமதிக்கு தடையால் உலக சந்தையில் அரிசி விலை உயர்ந்துள்ளது.


இந்தியாவில் இருந்து ஏற்றுமதிக்கு தடையால் உலக சந்தையில் அரிசி விலை உயர்ந்துள்ளது.

ஏற்றுமதிக்கு தடை

மத்திய அரசு தேசிய அளவில் அரிசி விலை உயர்ந்து வருவதை கட்டுப்படுத்த அரிசி ஏற்றுமதிக்கு கடந்த ஜூலை 20-ந் தேதி தடை விதித்தது. மேலும் புழுங்கல் அரிசிக்கு 20 சதவீத ஏற்றுமதி வரி விதிப்பை நடைமுறைக்கு கொண்டு வந்தது.

பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையாக டன்னுக்கு 1,200 டாலர் என மத்திய அரசு நிர்ணயித்தது. இதனால் உள்ளூர் சந்தையில் அரிசி விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் புழுங்கல் அரிசி விலை கடந்த ஜூலை மாதம் டன் ரூ. 39 ஆயிரம் ஆக இருந்த நிலையில் தற்போது டன் ரூ.32ஆயிரமாக ஆக குறைந்துள்ளது.

விலை உயர்வு

இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றுமதிக்கு தடையால் உலகச் சந்தையில் அரிசி விலை டன் 700 டாலராக உயர்ந்துள்ளது. அரிசி உற்பத்தி நாடான தாய்லாந்தில் டன் 670 முதல் 690 டாலர் வரை விலை உயர்ந்துள்ளது. தாய்லாந்தில் 5 சதவீத உடைந்த குருணை அரிசி ஏற்றுமதி விலை கடந்த ஜூலை மாதம் டன் 534 டாலராக இருந்த நிலையில் தற்போது டன் 646 டாலராக உயர்ந்துள்ளது.

இதேபோன்று வியட்நாமில் கடந்த ஜூலை மாதம் ஏற்றுமதிக்கானஅரிசி விலை டன் 489 டாலராக இருந்த நிலையில் தற்போது டன் 504 டாலராக உயர்ந்துள்ளது. இந்தநிலையில் மலேசிய அரசு இந்திய அரசிடம் இருந்து நேரடியாக அரிசி இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

உள்ளூர் சந்தை

பாகிஸ்தானில் ஏற்றுமதி அரிசி விலை டன் 608 டாலர் முதல் 612 டாலராக உயர்ந்துள்ளது. ஆனால் இந்திய புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு டன் 500 டாலராக உள்ளது. மொத்தத்தில் மத்திய அரசு உள்ளூர் சந்தையில் அரிசி விலையை குறைக்க நடவடிக்கை எடுத்த நிலையில் அதன் காரணமாக உலக சந்தையில் அரிசி விலை உயர்ந்துள்ளது.

மேற்கண்ட தகவலை வணிகர்கள் தெரிவித்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்