நள்ளிரவில் போராட்டத்தில் குதித்த மக்கள் - கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு
|சென்னையில் வசிக்கும் வெளியூர்களைச் சேர்ந்த மக்கள் பலர் ஓட்டு போடுவதற்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்று வருகின்றனர்.
சென்னை,
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி, ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் விதமாக வரும் 19-ந்தேதி தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையில் வசிக்கும் வெளியூர்களைச் சேர்ந்த மக்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்று வருகின்றனர்.
இதன் காரணமாக நேற்று மாலை முதலே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அனைத்து பேருந்துகளிலும் கூட்டம் நிரம்பி காணப்படுகின்றன. இந்த நிலையில் நள்ளிரவில் திருச்சி, விழுப்புரம், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு போதிய அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று கூறி பொதுமக்கள், போக்குவரத்துக்கழக அதிகாரிகள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அரசு பேருந்துகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடுவாஞ்சேரி துணை ஆணையர் தலைமையிலான போலீசார், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மாற்றுப் பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்து அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.