< Back
மாநில செய்திகள்
திருவான்மியூரில் பரபரப்பு சம்பவம்: தனியார் இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரி காரில் கடத்தல் - 3 பேர் கைது
சென்னை
மாநில செய்திகள்

திருவான்மியூரில் பரபரப்பு சம்பவம்: தனியார் இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரி காரில் கடத்தல் - 3 பேர் கைது

தினத்தந்தி
|
8 Oct 2023 1:26 PM IST

சென்னை திருவான்மியூரில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அதிகாரியை காரில் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 26). இவர், சென்னை திருவான்மியூர் கிழக்கு மாதா தெருவில் இயங்கி வரும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் தன்னை காரில் 3 பேர் கடத்தி செல்வதாக நிறுவனத்தின் மேலாளருக்கு செல்போனில் பதறியபடி தகவல் தெரிவித்தார்.

உடனே அவர், திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் இன்சூரன்ஸ் அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் இருந்து அவர் கடத்தப்பட்டது தெரிய வந்தது. ஆனந்தின் செல்போன் எண் மூலம் அவர் இருக்கும் இடத்தை போலீசார் கண்டறிந்து அவரை மீட்டனர்.

ஆனந்தை கடத்தி சென்ற குரோம்பேட்டை வ.உ.சி. நகரை சேர்ந்த பார்த்திபன் (34), கோவிலம்பாக்கம் எஸ்.கொளத்தூர் இந்திரபுரி 5-வது தெருவை சேர்ந்த கோதண்டராமன் (33), குரோம்பேட்டை அத்திவரதர் காலனி 2-வது தெருவை சேர்ந்த நடராஜ் (34) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான பார்த்திபன், கோதண்டராமன் 2 பேரும் கோவிலம்பாக்கத்தில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார்கள். நடராஜ் வாடகை கார் டிரைவர் ஆவார்.

ஆனந்த் கடத்தப்பட்டது ஏன்? என்பது பற்றி போலீசார் விசாரணையில் கிடைத்த தகவல் வருமாறு:-

பாத்திபன், கோதண்டராமன் ஆகிய 2 பேரும் தங்களுடைய நிறுவனங்கள் மூலம் ஆனந்த் வேலை பார்க்கும் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளனர். கமிஷன் அடிப்படையில் இப்பணியை அவர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில் ஆனந்த் கமிஷன் தொகை ரூ.2½ லட்சத்தை தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இதனால் சம்பவத்தன்று அலுவலகத்தில் இருந்த ஆனந்தை செல்போனில் தொடர்புக் கொண்டு நண்பர் ஒருவர் உங்களை சந்திக்க கீழே காத்திருக்கிறார். வாருங்கள் என்று ஏமாற்றி காரில் கடத்தி சென்றது தெரிய வந்தது. விசாரணைக்கு பின்னர், 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்