சென்னை
ராயப்பேட்டையில் பரபரப்பு சம்பவம்: அடுக்குமாடி குடியிருப்பில் பெண்ணிடம் அத்துமீறல் - ரவுடி காவலாளி கைது
|சென்னை ராயப்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண்ணிடம் அத்துமீறிய ரவுடி காவலாளி கைது செய்யப்பட்டார்.
சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 23 வயது இளம்பெண் ஒருவர், தனது தோழியுடன் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் கதவை காவலாளி ஜான் என்ற லிட்டில் ஜான் (வயது 40) தட்டினார். சத்தம் கேட்டு இளம்பெண்ணின் தோழி கதவை திறந்தார். உடனடியாக உள்ளே நுழைந்த காவலாளி ஜான், இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.
அதிர்ச்சி அடைந்த அவர், காவலாளி ஜானை பால்கனியில் தள்ளிவிட்டு கதவை பூட்டிக்கொண்டார். பின்னர் சத்தம் போட்டார். உடனடியாக அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் திரண்டனர். காவலாளி ஜான் தன்னிடம் அத்துமீறலில் ஈடுபட்டது குறித்து கண்ணீர் மல்க கூறினார். குடியிருப்புவாசிகள் ஜானை பிடித்து வைத்துக் கொண்டு அண்ணாசாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அண்ணாசாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். காவலாளி ஜானை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தார். இதில் அதிர்ச்சி தகவல் கிடைத்தது. காவலாளி ஜான், அம்பத்தூர் பகுதியை சேர்ந்த ரவுடி என்பதும், அம்பத்தூர் போலீஸ் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது.
இவர் மீது 3 கொலை, 2 கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி, கஞ்சா என 53 வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. விசாரணைக்கு பின்னர் ரவுடி காவலாளி ஜான், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.