ஈரோடு
கோபியில் பரபரப்பு: நகைக்கடை அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி
|கோபியில் நகைக்கடை அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடத்தூர்
கோபியில் நகைக்கடை அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகைக்கடை அதிபர்
ஈரோடு மாவட்டம் கோபி மொடச்சூர் ரோட்டை சேர்ந்தவர் சேகர் (வயது 63). இவருடைய மனைவி லதா. இவர்களுடைய மகன் அபிஷேக். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இவர்கள் அனைவரும் ஓரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
கோபி, சத்தியமங்கலம், அந்தியூர் பகுதிகளில் சேகர் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். அவருக்கு உதவியாக மகன் அபிஷேக் இருந்து வருகிறார். இந்தநிலையில் சேகருக்கு கடந்த மாதம் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதற்காக கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து சில நாட்களுக்கு முன்புதான் வீட்டுக்கு திரும்பி உள்ளார். அவரை வீட்டில் இருந்தவர்கள் கவனித்து வந்துள்ளனர்.
துப்பாக்கி சத்தம்
இந்தநிலையில் நேற்று முன்தினம் சொந்த வேலை காரணமாக அபிஷேக் அவருடைய மனைவியுடன் வெளியூருக்கு சென்று விட்டார். வீட்டில் சேகரும், லதாவும் மட்டும் இருந்தனர். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கணவன், மனைவி இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர்.
பின்னர் இருவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். சேகர் வீட்டின் மேல் மாடியில் உள்ள அறைக்கு தனியாக தூங்க சென்றார். லதா அருகே உள்ள அறையில் தூங்கிக்கொண்டு இருந்தார். இந்தநிலையில் நேற்று காலை சேகர் அறையில் இருந்து துப்பாக்கி சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த லதா பதறியடித்து கொண்டு அங்கு சென்றார்.
விசாரணை
அப்போது அறைக்குள் சேகர் நெற்றியில் இருந்து ரத்தம் கொட்டிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். அவருடைய கையின் அருகே துப்பாக்கியும் கிடந்துள்ளது. இதனை பார்த்ததும் லதா சத்தம் போட்டு அலறினார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். அவர்கள் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த சேகரை மீட்டு கோபியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கோபி போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கவேல், சப்-இன்ஸ்பெக்டர் கபிலக்கண்ணன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டனர். பின்னர் சேகர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கிடந்த துப்பாக்கி மற்றும் குண்டை பறிமுதல் செய்தனர். மேலும் சேகரின் வீட்டில் வேலை பார்க்கும் பெண்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
காரணம் என்ன?
சேகர் ஏற்கனவே உரிமம் பெற்று கைத்துப்பாக்கி வாங்கி வைத்துள்ளார். அந்த துப்பாக்கியில்தான் சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக சேகர் தற்கொலைக்கு முயன்றாரா?. வேறு ஏதேனும் பிரச்சினையா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோபியில் நகைக்கடை அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.