கள்ளக்குறிச்சியில் கலவரத்திற்கு உள்ளான பள்ளியை உடனடியாக திறக்க வாய்ப்பில்லை - மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் தகவல்
|கள்ளக்குறிச்சியில் கலவரத்திற்கு உள்ளான பள்ளியை உடனடியாக திறக்க வாய்ப்பில்லை என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி,
கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவியின் உயிரிழப்பை கண்டித்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியுள்ளது. இதில் காவல்துறையினர் மீது கல்வீச்சு காவல்துறையின் வாகனம் மற்றும் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை போராட்டக்கார்கள் அடித்து நொறுக்கி தீவைத்தனர்.
மாணவி இறப்பு விவகாரத்தில் என்ன நடந்தது என பள்ளியில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவி இறப்பு தொடர்பான போராட்டம் வன்முறையாக மாறியதால் கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், நயினார்பாளையம் உள்ள்ளிட்ட தாலுகா பகுதியில் வருகிற 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது கள்ளக்குறிச்சியில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. போக்குவரத்து சீராக்கப்பட்டுள்ளது. இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூடுதல் டிஜிபி தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் கலவரத்திற்கு உள்ளான பள்ளியை உடனடியாக திறக்க வாய்ப்பில்லை என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது. மேலும் பள்ளியை மீண்டும் திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் முடிவெடுப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் காரணமாக ஏறக்குறைய 4,000 மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.