திருநெல்வேலி
தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணி
|பாளையங்கோட்டையில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது.
தகவல் அறியும் உரிமை சட்டம்- 2005 விழிப்புணர்வு வார விழா ஆண்டுதோறும் அக்டோபர் 5-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பாளையங்கோட்டையில் விழிப்புணர்வு பேரணி நேற்று காலையில் நடந்தது. தொழிலாளர் இணை ஆணையர் சுமதி, பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையாளர் காளிமுத்து ஆகியோர் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தனர்.
பாளையங்கோட்டை தெற்கு பஜார் லூர்துநாதன் சிலை அருகில் தொடங்கிய பேரணியானது பாளையங்கோட்டை பஸ்நிலையம் வரை நடைபெற்றது. இதில் தொழிலாளர் உதவி ஆணையர் முருகபிரசன்னா, சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், தொழிலாளர் துறை பொது தகவல் அலுவலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள், மாநகராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் இருந்து தொடங்கிய தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணியை நெல்லை உதவி கலெக்டர் ஷேக் ஆயூப் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தாசில்தார் சரவணன் முன்னிலை வகித்தார். பேரணி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வரை சென்று முடிவடைந்தது. இதில் இளைஞர்கள், வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.
இதேபோல நெல்லை சந்திப்பு ரெயில்நிலையம் முன்பு இருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை தாசில்தார் ஜெயலட்சுமி தொடங்கி வைத்தார். இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.