< Back
மாநில செய்திகள்
அரிசிக்கான ஜி.எஸ்.டி. வரியை தவிர்க்க 26 கிலோ பைகளுக்கு மாறும் வியாபாரிகள்
மாநில செய்திகள்

அரிசிக்கான ஜி.எஸ்.டி. வரியை தவிர்க்க 26 கிலோ பைகளுக்கு மாறும் வியாபாரிகள்

தினத்தந்தி
|
2 Aug 2022 12:24 PM IST

ஜி.எஸ்.டி. வரி விதிப்பை தவிர்க்கும் விதமாக 26 கிலோ பேக்கிங் செய்த அரிசி பைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

திருப்பூர்:

அரிசி உள்ளிட்ட சில உணவு பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு விதித்தது. அதன்படி 25 கிலோ வரையிலான பேக்கிங் செய்யப்பட்ட பிராண்ட் மற்றும் நான் பிராண்டட் அரிசிகளுக்கு 5 சதவீத வரி விதிக்கப்பட்டதால் அரிசியின் விலை உயர்ந்தது.

இதனால் பொதுமக்கள் பலரும் 25 கிலோ பைக்கு பதிலாக, மளிகை கடைகளில் சில்லரை முறையில் வாங்கி வந்தனர். இந்த நிலையை மாற்றும் வகையிலும், ஜி.எஸ்.டி. வரி விதிப்பை தவிர்க்கும் விதமாகவும் 26 கிலோ பேக்கிங் செய்த அரிசி பைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இது குறித்து அரிசி மண்டி மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் துரைசாமி கூறியதாவது:-

25 கிலோ அரிசி பேக்கிங்கிற்கு பதிலாக கூடுதலாக ஒரு கிலோ வைத்து 26 கிலோ பேக்கிங் செய்யும் போது, பொதுமக்களுக்கு ரூ.50 வரை குறையும். முன்பு இருந்த எல்.எம்.ஏ. விதி தற்போது ரத்து செய்யப்பட்டு, 25 கிலோவுக்கு மேல் செல்லும் போது வரிக்கு உட்படுத்த தேவையில்லை என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அரிசி வியாபாரிகள் 25 கிலோவுக்கு உட்பட்டது சில்லரை வணிகம் என்றும், 25 கிலோவிற்கு மேல் சென்றால் மொத்த வியாபாரம் என்றும் பிரித்துள்ள நிலையில், ஜி.எஸ்.டி. விதிகளின்படி அரிசிக்கு சில்லரை வர்த்தகம் செய்வதற்கு மட்டுமே 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

அதனால் 26 கிலோ பேக்கிங் செய்து விற்பனை செய்யும் போது, அது மொத்த வர்த்தகமாக கணக்கிடப்படும். இது சட்டத்திற்கு உட்பட்டது தான். ஜி.எஸ்.டி. அதிகாரிகளும் இதனை தெளிவுபடுத்திவிட்டனர். இதனால் தான் வரி விதிப்பை தவிர்க்க 26 கிலோ அரிசி பேங்கிங் செய்து வருகிறோம் என அவர் கூறினார்.

மேலும் செய்திகள்