< Back
மாநில செய்திகள்
நெல், கரும்புக்கான ஆதரவு விலையை உயர்த்தாவிட்டால் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம் - விவசாய சங்க தலைவர் வேலுசாமி பேட்டி
நாமக்கல்
மாநில செய்திகள்

நெல், கரும்புக்கான ஆதரவு விலையை உயர்த்தாவிட்டால் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம் - விவசாய சங்க தலைவர் வேலுசாமி பேட்டி

தினத்தந்தி
|
13 Jun 2023 12:30 AM IST

நெல், கரும்புக்கான ஆதரவு விலையை உயர்த்தாவிட்டால் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம் என விவசாய சங்க தலைவர் வேலுசாமி பேட்டி அளித்தார்.

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேலுசாமி நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து உரிய காலத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்ததற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த தண்ணீர் கடைமடை வரை செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியான நெல், கரும்பு, ஆவின் பாலுக்கு உரிய விலையை தி.மு.க. அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இதனால் விவசாயிகள் பெருத்த ஏமாற்றத்தில் உள்ளனர். உடனடியாக பாலுக்கான விலையை உயர்த்தி அறிவிப்பதுடன், நெல், கரும்புக்கு தமிழக அரசின் ஆதரவு விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகளை ஒன்று திரட்டு சென்னை கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம்.

தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் கள்ளுக்கடையை திறக்க வேண்டும். மத்திய அரசு கோதாவரி- காவிரி ஆறு இணைப்பு திட்டத்தை கைவிட்டு விட்டது. உடனடியாக நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் கடந்த பட்ஜெட் தொடரில் நிறைவேற்றப்பட்ட நில சீர்திருத்த சட்டத்தின்படி விவசாயிகளின் நிலத்தை எவ்வித முன் அறிவிப்பும் இன்றி அரசு கையகப்படுத்தலாம். இது வெளிநாட்டு கம்பெனிகளுக்கு ஆதரவான சட்டம். இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த சட்டத்தை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். மேகதாதுவில் அணையை கட்டுவோம் என அங்குள்ள பொதுப்பணித்துறை மந்திரி சிவகுமார் கூறுகின்றார். அவர் தமிழகத்தை சீண்டி பார்க்கின்றார். அவ்வாறு தொடர்ந்து சீண்டி பார்த்தால் நெய்வேலியில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் மின்சாரத்தை தடுத்து நிறுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
மேலும் செய்திகள்