திருவள்ளூர்
மீஞ்சூரில் அரிசி கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு
|மீஞ்சூரில் அரிசி கடையின் பூட்டை உடைத்து ரூ.80 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் வேளாளர் தெருவில் அரிசி கடை நடத்தி வருபவர் சுரேஷ் (வயது 46). நேற்று முன்தினம் இரவு இவர் வழக்கம் போல வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை கடையில் வேலை செய்து வரும் முருகன் (28) என்பவர் கடையை திறக்க வந்தாா்.
அப்போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து அவர் கடையின் உரிமையாளர் சுரேஷிற்கு தகவல் தெரிவித்தார்.
பின்னர் கடையின் உரிமையாளர் சுரேஷ் கடைக்கு வந்து கல்லாப்பெட்டியை பார்த்தபோது அதில் இருந்த ரூ.80 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
திருட்டு சம்பவம் குறித்து அவர் மிஞ்சூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு வந்து திருட்டில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.