< Back
மாநில செய்திகள்
காட்டுப்பன்றிகளால் நெற்பயிர்கள் நாசம்
விருதுநகர்
மாநில செய்திகள்

காட்டுப்பன்றிகளால் நெற்பயிர்கள் நாசம்

தினத்தந்தி
|
19 Dec 2022 1:00 AM IST

திருச்சுழி அருகே காட்டுப்பன்றிகளால் நெற்பயிர்கள் நாசமானது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

திருச்சுழி,

திருச்சுழி அருகே காட்டுப்பன்றிகளால் நெற்பயிர்கள் நாசமானது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

நெல் சாகுபடி

திருச்சுழி அருகே சென்னிலைக்குடி பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனர். சென்னிலைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது.

இந்தநிலையில், இந்த பகுதியில் விவசாயிகள் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்த ஆண்டு திருச்சுழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ள நிலையில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விவசாயிகள் கவலை

இதனால் தங்கள் விளைநிலங்களில் களையெடுத்தல், உழவுப்பணி, விதைப்பு உள்ளிட்ட விவசாய பணிகளை தீவிரமாக செய்தனர். அடுத்த மாதம் அறுவடைக்கு நெற்பயிர்கள் தயார் நிைலயில் உள்ளன. இந்தநிலையில் காட்டுப்பன்றிகள் வயலுக்குள் புகுந்து நெற்பயிர்களை நாசம் செய்து விட்டது.

இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கடன் வாங்கி விவசாயம் செய்து வரும் நிலையில் தற்போது காட்டுப்பன்றிகளின் அட்டகாசத்தால் நெல்லில் மகசூல் பெற முடியாத நிலை உள்ளது.

நடவடிக்கை

ஆதலால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட வயல்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதுடன், காட்டுப்பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிரந்தர தீர்வு

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், விருதுநகர் மாவட்டம் முழுவதும் நெற்பயிர்கள், மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்களை காட்டுப்பன்றிகள், முயல்கள் உள்ளிட்டவை சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் கடன் வாங்கி சாகுபடி செய்தும், முழு பலனை பெற முடியாத நிலை உள்ளது. எனவே பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் விலங்குகளை பிடித்து அகற்றுவதுடன், இதற்கு நிரந்தர தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்