ராமநாதபுரம்
வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் சுழலும் கண்காணிப்பு கேமரா
|லாரிகளில் உப்புகள் ஏற்றி செல்வதை கண்காணிக்க வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் சுழலும் நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது.
சாயல்குடி,
லாரிகளில் உப்புகள் ஏற்றி செல்வதை கண்காணிக்க வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் சுழலும் நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது.
அரசு உப்பு நிறுவனம்
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள வாலிநோக்கம் பகுதியில் தமிழக அரசின் உப்பு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த உப்பு நிறுவனத்திற்கு சொந்தமான வாலிநோக்கம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட உப்பள பாத்திகள் உள்ளன.
இந்த பாத்திகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் கல் உப்புகள் அரசு உப்பு நிறுவனத்திற்கு லாரிகளில் ஏற்றி கொண்டு வரப்படுகிறது. அங்கு எந்திரத்தில் அரைத்து அயோடின் உப்பாகவும் பேக்கிங் செய்து தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும் கல் உப்புகளை ஒரு கிலோ பாக்கெட்டுகளில் பேக்கிங் செய்தும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
கண்காணிப்பு கேமரா
இதை தவிர தூத்துக்குடி, சேலம், நாமக்கல் மற்றும் பல வெளி மாநிலங்களுக்கும் கல் உப்புகளாகவும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வாலிநோக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் உப்பு நிறுவனத்தில் வெளிப்பகுதியில் புதிதாக அதிநவீன கண்காணிப்பு கேமரா ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.
இது பற்றி உப்பு நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது. அரசு உப்பு நிறுவனத்திற்கு சொந்தமான பாத்திகளில் இருந்து சேகரிக்கப்படும் கல் உப்புகள் உப்பு நிறுவனம் எதிரே உள்ள பகுதியில் குவித்து வைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு குவித்து வைக்கப்படும் கல் உப்புகள் லாரிகள் மூலம் வெளியூர்களுக்கு அனுப்பப்படுகின்றன. உப்புகள் லாரிகள் மூலம் வெளியூர்களுக்கு அனுப்பப்படுவதை கண்காணிப்பதற்காகவும், உப்பு நிறுவனத்தின் அருகே வெளிநபர்கள் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காகவும் புதிதாக அதி நவீன சுழலும் கண்காணிப்பு கேமரா ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.
இந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை வாலி நோக்கத்தில் உப்பு நிறுவன அலுவலகத்தில் இருந்தும் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்தும் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.