புதுக்கோட்டை
புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி, பெண்கள் இயக்கத்தினர் உண்ணாவிரதம்
|புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி, பெண்கள் இயக்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி அருகே உள்ள தெட்சிணாபுரம் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு சொந்தமான பட்டயன் கோவில் உள்ளது. இக்கோவில் நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி ஆலங்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி மற்றும் புரட்சிகர பெண்கள் இயக்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சம்ரன், செயலாளர் சசிகலா பாரதி ஆகியோர் தலைமை தாங்கினர். பட்டியலின மக்களுக்கு சொந்தமான பூர்வீக கோவில் நிலத்தை தனிநபர்கள் மிரட்டி, அத்துமீறி நிலம் முழுவதையும் அபகரிக்கும் நோக்கத்தோடு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் எனக்கூறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி தாசில்தார் விஸ்வநாதன் மற்றும் மண்டல துணை தாசில்தார் பாலகோபாலன் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட தெட்சிணாபுரம் கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து அலுவலகத்தில் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கிளை தலைவர் முருகன் உள்பட புரட்சிகர கம்யூனிஸ்டு மற்றும் புரட்சிகர பெண்கள் இயக்கத்தினர் கலந்து கொண்டனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.