சேலம்
ேதாட்டக்கலை கூடுதல் துணை இயக்குனர் ஆய்வு
|ஏற்காட்டில் நாளை மறுநாள் கோடை விழா தொடங்கி 1-ந் தேதி வரை நடக்கிறது. கோடை விழா பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை தோட்டக்கலை கூடுதல் துணை இயக்குனர் ஆய்வுசெய்தார்.
ஏற்காடு:
ஏற்காட்டில் நாளை மறுநாள் கோடை விழா தொடங்கி 1-ந் தேதி வரை நடக்கிறது. கோடை விழா பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை தோட்டக்கலை கூடுதல் துணை இயக்குனர் ஆய்வுசெய்தார்.
கோடை விழா
ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை மறுநாள் (புதன்கிழமை) தொடங்கி 1-ந் தேதி வரை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கலையரங்கம் முன்பு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி ஏற்பாடுகளும் துரிதமாகநடக்கிறது.
சுமார் 5 லட்சம் மலர்களை கொண்டு மலர் அலங்காரம் செய்யப்படுகிறது. இதுதவிர 15 ஆயிரம் மலர்கள் சிறிய தொட்டிகளில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு 8 நாட்கள் கோடை விழா நடப்பதால் ஏற்காட்டில் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மலர்களின் ெபயர்
மலர் கண்காட்சியில் இடம் பெறும் மலர்களின் பெயர்கள், வகைகளை சுற்றுலா பயணிகள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் ஸ்கேனர் வசதி செய்யப்பட்டுள்ளது. அதாவது அந்தந்த செடிகளின் அருகில் உள்ள ஸ்கேனர்களை ஸ்கேன் செய்யும் போது அந்த மலர் பெயர், வகைகள் குறித்த விவரங்களை அறிந்துகொள்ளலாம்.
ஏற்காட்டில் தற்போது மழைப்பொழிவு அதிகமாக இருப்பதால் கூடாரம் அமைத்து மலர்செடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கோடை விழா ஏற்பாடுகளை தோட்டக்கலை கூடுதல் இயக்குனர் கண்ணன் நேரில் பார்வையிட்டு பணிகளை முடுக்கி விட்டார்.
மாம்பழ கண்காட்சி
இதுதவிர மாங்கனி மாவட்டம் என பெயர் பெற்றதால் மாம்பழ கண்காட்சி நடத்தவும் முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது. அதாவது சேலம், நாமக்கல், தர்மபுரி, திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து மாம்பழங்கள் வரவழைக்கப்பட்டு 100 வகையான மாம்பழங்கள் வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், குறைந்தபட்சம் 50 வகையான மாம்பழங்கள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர மலர்களால் பல்வேறு தத்ரூப காட்சிகள் வடிமைக்கப்பட்டு வருகிறது. மேலும் பல்ேவறு கலைநிகழ்ச்சிகள் நடத்தவும் ஏற்பாடு நடந்து வருகிறது.
பல்வேறு வகையான உருவம்
இந்த கண்காட்சியில் வள்ளுவர் கோட்டம், மேட்டூர் அணை, இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பது, மாட்டு வண்டி உள்ளிட்டவை மலர்களால் உருவம் செய்யப்படுகிறது. மகளிருக்கான இலவச பேருந்து வசதி திட்டத்தை ஊக்குவிக்கும் வகையிலான வடிவம் ஆகியவை இடம்பெறுகிறது. தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் விளைவிக்கப்பட்ட பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. 46 வகையான பழங்களால் ஆன உணவு பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது என்று தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறினர்.
ஆய்வின் போது தோட்டக்கலை துறை துணை இயக்குனர் கணேசன், தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் மீனாட்சி சுந்தரம் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.