தேனி
மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: தமிழ் மாநில காங்கிரஸ் மனு
|மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மனு கொடுத்தனர்
மின் கட்டண உயர்வு
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் மனுக்கள் கொடுத்தனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் செல்வேந்திரன் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், "தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது கண்டிக்கத்தக்கது. 6 மாதங்களுக்கு முன்பு தான் சொத்து வரியை தமிழக அரசு உயர்த்தியது. தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தியது மக்களுக்கும், சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கும் பாதிப்பை கொடுக்கும். எனவே இந்த மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
ஆர்ப்பாட்டம்
தமிழ்ப்புலிகள் கட்சியின் இளம்புலிகள் அணி மாநில செயலாளர் தலித்ராயன், மாநில பொறுப்பாளர் தமிழரசி மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், பஞ்சமி நிலங்களை மீட்டு உரிய மக்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்றும், சில போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி இருந்தனர். மேலும், தேனி கர்னல் ஜான்பென்னிகுயிக் பஸ் நிலையம் அருகில் வாடகை வாகனங்கள் நிறுத்தம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி டிரைவர்கள் சிலர் மனு கொடுத்தனர்.
அதுபோல் க.விலக்கில் மனமகிழ் மன்றம் விதிமீறலை கண்டித்தும், குள்ளப்புரத்தில் கல்குவாரியில் விதி மீறலை கண்டித்தும் அகில இந்திய சட்ட உரிமை கழகம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஆனந்த் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.