< Back
மாநில செய்திகள்
திருமண மண்டபங்களிலும், விளையாட்டு அரங்கங்களிலும் மதுபானம் வழங்கும் முடிவை திரும்பப்பெற வேண்டும் - சீமான்
மாநில செய்திகள்

திருமண மண்டபங்களிலும், விளையாட்டு அரங்கங்களிலும் மதுபானம் வழங்கும் முடிவை திரும்பப்பெற வேண்டும் - சீமான்

தினத்தந்தி
|
24 April 2023 2:29 PM IST

திருமண மண்டபங்களிலும், விளையாட்டு அரங்கங்களிலும் மதுபானம் வழங்கும் முடிவை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

திருமண மண்டபங்களிலும், விளையாட்டு அரங்கங்களிலும் மதுபானம் வழங்கும் முடிவை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருமண மண்டபங்களிலும், விளையாட்டு அரங்கங்களிலும் மது வழங்க அனுமதி அளித்து திமுக அரசு அரசாணை பிறப்பித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மதுவையே முதன்மை வருமானமாக நம்பி அரசை நடத்தும் திமுக அரசு, தற்போது திருமண மண்டபங்கள் வரை மது விற்பனையை விரிவுப்படுத்தி இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் என்று கடந்த காலங்களில் கூறிய திமுக, ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் மதுவிற்பனையை மேலும் பல்லாயிரம் கோடிகள் அதிகரிக்கப் புதுப் புது முயற்சிகளை எடுத்து தீவிர திட்டங்களைத் தீட்டி வருகிறது. இந்தியாவிலேயே இலக்கு வைத்து மதுவிற்பனை செய்யும் ஒரே மாநிலம் திராவிட மாடல் ஆட்சி செய்யும் தமிழ்நாடு மட்டுமேயாகும். அதிக இலாபம் ஈட்டும் அரச நிறுவனமாக டாஸ்மாக்கை மாற்றியிருப்பதுதான் திராவிடக் கட்சிகளது ஆட்சியின் சாதனை.

தகுதி வாய்ந்த பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்குவதற்கு 7000 கோடிகளை ஒதுக்குவதாக அறிவித்துள்ள திமுக அரசு, அதனை ஈடுகட்ட டாஸ்மாக் வருமானத்தை 45000 கோடிகளிலிருந்து 50000 கோடிகளாக அதிகரித்துக் கோடிக்கணக்கான பெண்களின் குடும்பத்தைக் காவு வாங்க திட்டமிட்டுள்ளது. அதற்காக மதுக்கடைகள் திறப்பு நேரம் அதிகரிப்பு, பார்கள் 24 மணி நேரமும் இயங்க அனுமதி, பெண்களுக்குத் தனி பார் வசதி என அனைத்துச் சீரழிவு முயற்சிகளையும் வேகவேகமாக முன்னெடுத்து வருகிறது.

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொலை, கொள்ளை உள்ளிட்ட கொடுங்குற்றங்கள், பாலியல் வன்கொடுமைகள், சாலை விபத்துகள், இள வயது மரணங்கள், இளம் விதவைகள், அதிகரிக்கும் நோய்த்தொற்றுகள், குழந்தை தொழிலாளர் முறை ஆகியவை அதிகரிக்கவும், சமூகமே குற்றச்சமூகமாக மாறி சட்டம்-ஒழுங்கு சீரழியவும் முதன்மைக் காரணம் திராவிட அரசுகள் விற்கும் மதுதான்.

கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிக்க திமுக அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்தபோது, மது போதைப்பொருள் அல்லாமல் புனித தீர்த்தமா? என்ற எனது நெடுநாள் கேள்விக்கு இன்றுவரை திமுக அரசிடம் பதில் இல்லை.

மதுவிற்பனை மூலம் வரும் வருமானம் தொழுநோயாளி கையில் வழியும் வெண்ணெய்க்குச் சமம் என்று சொன்ன அறிஞர் அண்ணாவின் வழிவந்தவர்கள் அந்த வெண்ணெயை விற்றுதான் ஆட்சி நடத்தமுடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டதுதான் வரலாற்றுப்பெருந்துயரம்.

எத்தனை குடும்பங்கள் சிதைந்தாலும் பரவாயில்லை, இளைய தலைமுறையினர் சீரழிந்தாலும் பரவாயில்லை, எத்தனை உயிர்கள் போனாலும் பரவாயில்லை தாங்கள் நடத்தும் மதுபான ஆலைகள் வளம்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் திராவிட ஆட்சியாளர்களால் தமிழ்நாடு மிகப்பெரிய பேரழிவை நோக்கிச் செல்கிறது. தீயப் பழக்கமாக இருந்த மதுவை, திராவிடப் பண்பாடாகவே திமுக அரசு மாற்றி நிறுத்தியுள்ளது வெட்கக்கேடானது. இதுதான் உலகம் வியக்கும் திமுகவின் திராவிட மாடல் ஆட்சியா? மக்கள் நலப்பணியாற்றும் மாவட்ட ஆட்சியர்களையும், காவல்துறை ஆணையர்களையும் மதுவிற்பனைக்கு அனுமதி வழங்கும் தரகர்கள் போல மாற்றியுள்ளது மக்களாட்சிக்கே ஏற்பட்ட மாபெரும் தலைகுனிவாகும்.

பேருந்துகள் தனியார் மயம் என்று அறிவிப்பு வெளியிடுவது பின் எதிர்ப்பு கிளம்பியதும் போக்குவரத்துதுறை அமைச்சர் அதனை மறுப்பது, அரசுப் பள்ளிகளில் ஒப்பந்த ஆசிரியர்கள் நியமனம் என்று அறிவிப்பது, பின்னர்க் கல்வித்துறை அமைச்சர் அதனை மறுப்பது என்று முன்னுக்குபின் முரணாகப் பேசி மக்களைக் குழப்பிவிட்டு, குறுக்கு வழியில் அதனை நடைமுறைப்படுத்துவது போல்,

திருமண மண்டபங்களில் மதுவிற்பனை என்று அறிவித்துவிட்டு, தற்போது எதிர்ப்பு ஏற்பட்டவுடன் அமைச்சர் ஒருவர் அதனை மறுப்பது திமுகவின் வழக்கமான ஏமாற்று தந்திரமே அன்றி வேறில்லை.

ஆகவே, திருமண மண்டபங்களிலும், விளையாட்டு அரங்கங்களிலும் மது விற்பனை செய்யப்படும் என்ற தமிழ்நாட்டைச் சீரழிக்கும் முடிவினை திமுக அரசு திரும்பப்பெறுவதோடு, தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்