நடப்பு நிதியாண்டில் வணிகவரித்துறையில் பிப்ரவரி வரை ரூ.1.17 லட்சம் கோடி வருவாய் - அமைச்சர் மூர்த்தி தகவல்
|நடப்பு நிதியாண்டில் வணிகவரிதுறையில் பிப்ரவரி மாதம் வரை ரூ.1,17,458 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னை,
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
வணிகவரித்துறையில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக வணிகவரி வசூல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வணிக வரித்துறையில் நடப்பு நிதியாண்டில் 28.2.2023 வரையிலான மொத்த வருவாய் ரூ. 1,17,458.96 கோடி ஆகும்.
கடந்த ஆண்டின் இதே நாளில் இத்துறையின் வருவாய் ரூ. 92,931.57 கோடி ஆக இருந்தது. இவ்வகையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் இதே நாளில் 24,527.39 கோடி வருவாயை வணிகவரித்துறை அதிகமாக ஈட்டியுள்ளது.
அதே போன்று பதிவுத்துறையில் ஆவணங்கள் பதிவின் மூலம் பெறப்படும் வருவாய் நடப்பு ஆண்டில் வரலாற்று சாதனையை எட்டியுள்ளது. நடப்பாண்டில் 28.2.2023 வரை பதிவுத்துறையில் வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் ரூ. 15,684.83 கோடி ஆகும். கடந்த வருடம் இதே நாளில் வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் ரூ. 12,161.51 கோடியை விட ரூ. 3,523.32 கோடி அதிகமாக நடப்பு ஆண்டில் பதிவுத்துறையால் வசூலிக்கப்பட்டுள்ளது.
வணிகவரி மற்றும் பதிவுத்துறைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளினாலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் ஆய்வு கூட்டங்களினாலும் இத்துறைகளின் வருவாய் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.