நாகப்பட்டினம்
வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள்
|நாகை கல்வித்துறை சார்பில் நடந்த வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் பரிசு வழங்கினார்.
நாகை கல்வித்துறை சார்பில் நடந்த வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் பரிசு வழங்கினார்.
தடகள போட்டிகள்
நாகை கல்வித்துறை சார்பில் பாரதியார் பிறந்த நாள் மற்றும் குடியரசு தின விழாவையொட்டி, வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் மாவட்ட விளையாட்டு திடலில் நேற்று நடந்தது. போட்டிக்கான ஒலிம்பிக் சுடரை மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரன் ஏற்றி வைத்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
போட்டியில் நாகை, வேதாரண்யம், சிக்கல், நாகூர், திட்டச்சேரி, திருமருகல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போட்டியில் கலந்துகொண்டனர். இதில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப்போட்டிகள் மற்றும் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி தலைமை தாங்கி, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
நாகை அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜான்பிரிட்டோ, மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் கார்த்திகேஷன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோசப் வரவேற்றார். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் ஹென்றி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜேஷ் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள், உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மாநில அளவிலான போட்டி
இப்போட்டியில் முதல் 2 இடங்களை பிடிப்பவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.