திருவள்ளூர்
திருத்தணியில் ஆக்கிரமிப்பு அரசு நிலத்தில் வருவாய் துறையினர் நோட்டீஸ்
|திருத்தணியில் அரசு நிலம் ஆக்கிரமித்து சுவர்கள் கட்டிய பகுதியில் ஆய்வு செய்த வருவாய் ஆய்வாளர் சுவர்களில் நோடீஸ் ஒட்டினர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஜெ.ஜெ.ரவி நகரில் அரசுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான 1½ ஏக்கர் பாறை புறம்போக்கு நிலம் உள்ளது. இதனை அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் தாசில்தார் மதன், வருவாய் ஆய்வாளர் கமல் ஆகியோர் மேற்பார்வையில் சர்வேயர்கள் நில அளவீடு செய்து அரசு நிலத்தை அடையாளம் கண்டு அங்கு எச்சரிக்கை பலகை வைத்தனர்.
இந்த நிலையில், வருவாய்த் துறையினர் வைத்த எச்சரிக்கை பலகையை 24-ந் தேதி மர்ம நபர்கள் அகற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று முன்தினம் திருத்தணி வருவாய் ஆர்.டி.ஓ. தீபா அரசு நிலம் ஆக்கிரமித்து சுவர்கள் கட்டிய பகுதியில் ஆய்வு செய்தார். உடனடியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோடீஸ் வழங்க உத்தரவிட்டார். இதனை அடுத்து தாசில்தார் மதன், வருவாய் ஆய்வாளர் (பொறுப்பு) முகமது யாசர் அராபத் ஆகியோர் அரசு நிலத்தை தன் வசம் வைத்துள்ள நபர்கள் அடையாளம் கண்டு சுவர்களில் நோடீஸ் ஒட்டினர். 15 நாட்களுக்குள் மாவட்ட கலெக்டர், திருத்தணி தாசில்தாரிடம் சம்பந்தப்பட்டவர்கள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.