திருவள்ளூர்
ஓய்வுபெற்ற அரசு ஊழியர் லாரி சக்கரத்தில் சிக்கி பலி - மற்றொருவர் படுகாயம்
|திருவள்ளூரில் லாரி மொபட் மீது மோதிய விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.
திருவள்ளூர் அடுத்த காக்களூர் பூங்கா நகர் குண்டுமல்லி தெருவை சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 65). ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர். இவரது மகன் கார்த்திகேயன். தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். கார்த்திகேயனின் மனைவி சுதானா (36). இவர் எல்லாபுரம் பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார்.
நேற்று காலை பச்சையப்பன் தனது மருமகள் சுதானா அலுவலகம் செல்வதற்காக பஸ் ஏற்றுவதற்காக மொபட்டில் ஏற்றிக்கொண்டு திருவள்ளூர் பஸ் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். திருவள்ளூர் உழவர் சந்தை அருகே சென்று கொண்டிருந்தபோது பஸ் நிலையத்திற்கு செல்ல வளைவில் திரும்பினார். அப்பொழுது சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மண் ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த லாரி பச்சையப்பன் மொபட் மீது மோதியது.
இதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்பொழுது லாரியின் சக்கரம் இருவர் மீதும் ஏறியது. இதில் பச்சையப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சுதானா கால்கள் இரண்டும் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் டவுன் போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுதானாவை மீட்டு உடனடியாக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் உயிரிழந்த பச்சையப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து லாரியை ஓட்டிக்கொண்டு வந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த அருணா நகரை சேர்ந்த ஷேக் தாவூத் (49) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மொபட் மீது லாரி மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.