< Back
மாநில செய்திகள்
ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். பெண் ஊழியரிடம் ரூ.7¼ லட்சம் மோசடி
திருச்சி
மாநில செய்திகள்

ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். பெண் ஊழியரிடம் ரூ.7¼ லட்சம் மோசடி

தினத்தந்தி
|
16 Jan 2023 8:35 PM GMT

ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். பெண் ஊழியரிடம் ரூ.7¼ லட்சம் மோசடி செய்யப்பட்டது.

திருச்சியை அடுத்த கம்பரசம்பேட்டை விக்னேஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் ஞானமூர்த்தி. இவரது மனைவி வளர்மதி(வயது 60). இவர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் பணியில் இருந்தபோது, இவருடன் திருச்சி சோமரசம்பேட்டை நாடார் தெரு பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி(61) என்பவரும், அதே அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்.

அப்போது தனக்குத் தெரிந்த ஒரு நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் இரண்டே ஆண்டுகளில் பணம் இரட்டிப்பு ஆகிவிடும் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் இதை வளர்மதி முதலில் நம்ப மறுத்தார். இதையடுத்து வேலுச்சாமி தனது மனைவி கலாதேவி மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை அழைத்துக் கொண்டு வளர்மதி வீட்டுக்கு சென்றார்.

பின்னர் அவரிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அவரிடம் ஆசை வார்த்தை கூறி கடந்த 2018-ம் ஆண்டு ரூ.7 லட்சத்து 35 ஆயிரத்தை பெற்றுச் சென்றனர். வளர்மதியும் 2 ஆண்டுகளில் பணம் இரட்டிப்பு ஆகிவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் குறிப்பிட்ட நாட்களை கடந்தும் அவருக்கு பணம் இரட்டிப்பு ஆகவில்லை. கொடுத்த பணமும் திரும்பி வரவில்லை.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து கொண்ட வளர்மதி இது தொடர்பாக ஜீயபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வேலுச்சாமி, அவரது மனைவி கலாதேவி மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 3 பேர் மீதும் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்