கோயம்புத்தூர்
திறந்தவெளி கிணறுக்கு தடுப்புச்சுவர்
|அரசு பள்ளிக்கு அருகில் உள்ள திறந்தவெளி கிணறுக்கு தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
சுல்தான்பேட்டை
அரசு பள்ளிக்கு அருகில் உள்ள திறந்தவெளி கிணறுக்கு தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
திறந்தவெளி கிணறு
சுல்தான்பேட்டை அருகே திம்மநாயக்கன்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 25-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் அங்குள்ள சாலை வழியாக தினமும் நடந்தும், வாகனங்களிலும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். மேலும் பொதுமக்களும் அந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அந்த சாலையோரத்தில் சுமார் 60 அடி ஆழம் கொண்ட கிணறு ஒன்று உள்ளது. பள்ளியில் இருந்து 70 மீட்டர் தொலைவில் உள்ள அந்த கிணற்றில் தடுப்புச்சுவர் கிடையாது. இதனால் திறந்தவெளி கிணறாகவே காட்சியளிக்கிறது.
விபத்தில் சிக்க வாய்ப்பு
இந்த நிலையில் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் கிணற்றுக்கு அருகில் சென்று விளையாடுகின்றனர். அப்போது கிணற்றுக்குள் தவறி விழும் அபாயம் நிலவுகிறது. மேலும் அந்த வழியாக செல்லும் வாகனங்களும் கிணற்றில் விழும் நிலை உள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் வரும் வாகனங்கள் கிணறு இருப்பதை அறியாமல் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, இந்த சாலை வழியாக தினமும் பள்ளி மாணவ-மாணவிகள் மட்டுமின்றி பலரும் சென்று வருகின்றனர். மேலும் வாகன போக்குவரத்தும் மிகுந்த சாலையாக விளங்குகிறது. ஆனால் சாலையோரம் உள்ள திறந்தவெளி கிணறு அந்த வழியாக வரும் ஆட்களை விழுங்க காத்திருக்கிறது. ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன்பு, அந்த கிணற்றை சுற்றி தடுப்புச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.