சென்னை மாநகராட்சி பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடுகள் விதிப்பு
|சென்னை மாநகராட்சி பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சென்னை,
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமி சுதக்ஷாவை 2 நாய்கள் கடித்து குதறியது. இதில் சிறுமியின் கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயத்துடன் சிறுமி, கிரீம்ஸ் ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிறுமியை கடித்த நாய்களின் உரிமையாளர் புகழேந்தி மற்றும் அவருடைய மனைவி தனலட்சுமி, மகன் வெங்கடேஷ் ஆகியோர் மீது வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் பிறரை கடித்து துன்புறுத்துதல், பிறரின் உயிருக்கு ஆபத்து விளைவித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் 3 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதுகுறித்து ஆயிரம் விளக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கழுத்தில் சங்கிலி போட்டும், வாயை மூடியும் அழைத்து வரப்படும் நாய்களுக்கு மட்டுமே சென்னை மாநகராட்சி பூங்காக்களில் அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
1 பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காக்களில் பாதுகாப்புகள் கடுமையாக்கப்படும்.
2 ஒவ்வொரு செல்லப்பிராணி உரிமையாளரும் ஒரு பூங்காவிற்குள் ஒரு நாயை மட்டுமே அழைத்துச் செல்வது கட்டுப்படுத்தப்படும்.
3. பூங்காவிற்குள் அனுமதிக்கப்படும் ஒவ்வொரு செல்லப் பிராணிகள் கயிறுகள் மூலம் கட்டப்பட்டு, அதன் வாய்ப்பகுதியானது மூடப்பட்டிருக்க வேண்டும்.
4. நாய்களுக்கு தடுப்பூசி போட அறிவுறுத்தப்படும். மேலும். செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
5. தெருநாய்கள் அல்லது கட்டவிழ்த்து விடப்பட்ட நாய்கள் பூங்காவிற்குள் நுழைவது கட்டுப்படுத்தப்படும்.
6 பூங்காவில் விளையாடும் பகுதியில் நாய்கள் நுழைவது தடை செய்யப்படும்.
7. இது தவிர துணை மற்றும் செல்ல நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளின் உரிமங்கள் சரிபார்க்கப்படும்.
8. செல்லப்பிராணி உரிமையாளர்கள் ஆர்வலர்கள் மற்றும் குடிமை முகமைகள் உட்பட சம்பந்தப்பட்ட அனைவரும் சட்ட நிலைகளுக்கு அப்பால் சென்று உரிமையாளர்களால் கட்டுப்படுத்தப்படாத விலங்குகளால் ஏற்படும் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
9. பழக்கமான மனிதர்கள் மற்றும் பழக்கப்பட்ட சுற்றுப்புறத்திலும் விலங்குகளின் நடத்தை வேறுபட்டிருக்கும். மேலும், வெளியில் புதிய சூழலில் வரும் போது குழந்தைகள் மற்றும் வயதானவர்களை காணும்போது விலங்குகளுக்கு பயம் மற்றும் பதட்ட உணர்வு ஏற்படும். இதனால் விலங்குகளின் நடத்தை முற்றிலும் வேறுபட்டிருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு விலங்குளின் உரிமையாளர்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் வெளியில் வரும் போது கவனத்துடன் விலங்குகளை கையாள வேண்டும்.
10. வெறித்தனமான நாய்களை வளர்க்கும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
11. கால்நடை மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி உரிமையாளர்கள் நாய்களை பராமரிக்க வேண்டும்.
12. அனைத்து செல்லப்பிராணிகளுக்கும் துணை தேவை. ஆனால், சரியான உரிமம் பெற்று அதன் பிறகு இனப்பெருக்கம் செய்து, விற்பனை செய்ய வேண்டும்.
13. விலங்குகளை வளர்ப்பவர்கள் அதற்கு தேவையான உணவு. இருப்பிடம். தண்ணீர் போன்றவற்றை வழங்க வேண்டும்.
14 இந்த வழிகாட்டுதல்களை பூங்கா காவலர்கள் தீவிரமாக கண்காணித்து அமல்படுத்த வேண்டும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.