சென்னை துறைமுகத்தில் பழுதான மண்டல வானிலை ஆய்வு மைய ரேடார் முழுமையான செயல்பாட்டுக்கு வந்தது
|சென்னை துறைமுகத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தின் ரேடார் பழுது நீக்கப்பட்டு 24 மணிநேர முழுமையான செயல்பாட்டை இந்திய வானிலை ஆய்வுத்துறை தலைமை இயக்குனர் தொடங்கி வைத்தார்.
வானிலை ரேடார்
மின்காந்த கதிர்வீச்சு அலைகளை பயன்படுத்தி ஒரு விமானம் அல்லது பொருள் எவ்வளவு தொலைவில், எவ்வளவு உயரத்தில் உள்ளது, அதன் வேகம் மற்றும் திசை என்ன என்பதை துல்லியமாக அளவிட உதவும் கருவிதான் ரேடார். விமானங்கள், கப்பல்கள், விண்கலம், ஏவுகணைகள், மோட்டார் வாகனங்கள், புயல் மற்றும் மழை உள்ளிட்ட வானிலை நிகழ்வுகள் மற்றும் நிலப்பரப்புகளைக் கண்டறிய ரேடார் கருவி பயன்படுத்தப்படுகிறது.
இந்திய வானிலை ஆய்வுத்துறையின் கீழ் இயங்கும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தால், வானிலை தொடர்பான தகவல்களை பெறுவதற்காக ஜெர்மனி நாட்டில் தயாரிக்கப்பட்ட எஸ்-பேண்ட் 'டாப்ளர் ரேடாா்' என்ற வகை ராட்சத பந்து வடிவிலான ரேடார் கடந்த 2002-ம் ஆண்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள சென்னை துறைமுக தலைவர் அலுவலகத்தின் 10-வது தளத்தில் அமைக்கப்பட்டது.
பழுதான ரேடார் சீரமைப்பு
இந்த ரேடார் கடந்த 2018-2019-ம் ஆண்டு வரை 24 மணிநேரமும் வானிலை தொடர்பான தகவல்களை அளித்து வந்தது. இந்தநிலையில் ரேடாரில் உள்ள ஒரு கருவி பழுதானதால் கடந்த 3 ஆண்டுகளாக குறைந்த நேரமே செயல்பட்டு தகவல்களை அளித்து வந்தது. இதை முறையாக சரிசெய்வதுடன், புதிய ரேடாரும் அமைக்க வேண்டும் என்றும் இந்திய வானிலை ஆய்வுத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. பழுதான கருவியின் உதிரிபாகம் கிடைப்பதில் இழுபறி ஏற்பட்டு வந்ததால் சரி செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உதவியுடன் இந்த ரேடார் சரிசெய்யப்பட்டு, நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இதை முறைப்படி இந்திய வானிலை ஆய்வுத்துறை தலைமை இயக்குனர் மகோபத்திரா தொடங்கி வைத்தார். நிகழ்வில் தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலசந்திரன், மத்திய தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் கூடுதல் தலைமைச் செயலாளர் (ஓய்வு) திருப்புகழ், இஸ்ரோவின் ரேடார் ஆய்வு மைய துணை இயக்குனர் ஆனந்தன், சென்னை துறைமுக செயலாளர் இந்திரஜில் அஸ்ரா ஆகியோர் கலந்துகொண்டனர்.
ரேடார் ஆயுட்காலம் நீட்டிப்பு
இதுகுறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது:-
இந்த ரேடார் கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வந்த நிலையில் ஆன்டெனா சார்ந்த எந்திர பாகம் தேய்மானம் அடைந்ததால் தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. காலப்போக்கில் ஏற்பட்ட தொழில்நுட்ப மாற்றங்கள் காரணமாக, பாதிப்படைந்த பாகத்துக்கான மாற்று பாகம் கிடைக்கவில்லை. கொரோனா காரணமாக தீர்வு காண்பதில் தாமதம் ஏற்பட்டது.
இந்திய அரசு புவி அமைச்சகம், இந்திய வானிலைத் துறை மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இணைந்து தொடர் நடவடிக்கைகள் மூலம் உள்நாட்டிலேயே புதிய பாகம் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது. புதிய பாகம் பொருத்தப்பட்டு இந்த ரேடார் மீண்டும் 24 மணி நேர செயல்பாட்டுக்கு வந்துள்ளது. குறைந்த செலவில் பழுது நீக்கப்பட்ட ரேடாரின் ஆயுட்காலம் மேலும் 10 ஆண்டுகள் நீடிக்கப்பட்டுள்ளது. இனி வானிலை நிகழ்வுகளை 24 மணி நேரமும் துல்லியமாக அறியமுடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.