உணவக சோதனைகள்; ஊடகங்களை அழைத்துச் செல்ல உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு ஐகோர்ட் தடை
|உணவகங்களில் நடத்தப்படும் திடீர் சோதனைகளை வீடியோ எடுத்து வெளியிட தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு ஐகோர்ட் இடைக்காலத்தடை விதித்துள்ளது.
சென்னை,
சென்னை ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார், உணவகங்களில் ஆய்வுக்கு செல்லும்போது விதிகளை பின்பற்றாமல் ஊடகங்களை அழைத்துச் சென்று வீடியோ எடுத்து வெளியிடுவதாகவும், இதனால் தங்கள் உணவகங்களின் பெயர் கெடுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார், உணவக சோதனையின் போது ஊடகங்களை அழைத்துச் சென்று ஊடகங்களை அழைத்துச் சென்று வீடியோ எடுக்க தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், கெட்டுப் போன உணவு என்பதை ஆய்வகத்தில் உறுதி செய்த பிறகு தான் நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு அதிகாரம் இருப்பதாகவும், அதை விடுத்து முன்கூட்டியே ஊடகங்களை அழைத்துச் சென்று வீடியோ எடுத்து வெளியிடுவது தவறு என்றும் குறிப்பிட்டார்.
இனி சோதனைக்கு செல்லும் போது ஊடகங்களை அழைத்துச் செல்லக்கூடாது, மாறாக துறை ரீதியான புகைப்பட கலைஞர்களையோ, வீடியோ பதிவாளரையோ அழைத்துச் செல்லலாம் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
மேலும் உணவகங்களில் நடத்தப்படும் திடீர் சோதனைகளை வீடியோ எடுத்து வெளியிட தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இடைக்காலத்தடை விதித்த நீதிபதி, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரியும், தமிழக அரசும் அக்டோபர் 17-ந்தேதிக்குள் பதில் மனு தாக்க செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.