< Back
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளிகளை மதிப்போம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளை மதிப்போம்

தினத்தந்தி
|
3 Dec 2022 12:52 AM IST

இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம். சக மனிதர்களைப்போன்று அவர்கள் அனைத்து துறைகளிலும் தங்களது உரிமையை நிலைநாட்டுவதற்கு உந்துசக்தியாக 1992-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ந்தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

21 வகையானவர்கள்

கை, கால்கள் செயலிழப்பு, முடக்கம், பார்வைத்திறன் பாதிப்பு, செவித்திறன் குறைபாடு, மனநலம், தொழுநோய் என மாற்றுத்திறனாளிகள் 7 வகையாக பிரிக்கப்பட்டு இருந்தனர். 2017-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் அமலுக்கு வந்த பின்னர், நரம்பியல் நோய், ரத்தசோகை நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் அந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டனர். தற்போது மாற்றுத்திறனாளிகள் 21 வகைகளாக பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

உடலளவில் குறைபாடு உள்ளவர்களாக இருந்தாலும் மனதளவில் தன்னம்பிக்கை நிறைந்த மனிதர்களாக மாற்றுத்திறனாளிகள் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்து வருகிறார்கள். அவர்களை மதித்திடுவோம்.

அரசு திட்டங்கள்

மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை செலுத்தும்விதமாக மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் 10 வயதுக்கு மேற்பட்ட 10 லட்சத்து 11 ஆயிரத்து 323 மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு இந்த வாரியம் மூலம் கல்வி, திருமணம், மூக்குக்கண்ணாடி போன்றவற்றுக்கான உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவம், என்ஜினீயரிங் உயர்கல்வியில் 5 சதவீத இடஒதுக்கீடு, அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீத இடஒதுக்கீடு, குறுந்தொழில் தொடங்க ரூ.25 ஆயிரம் நிதி உதவி, மாதம் ரூ.2 ஆயிரம் பராமரிப்பு உதவித்தொகை, ரூ.1,000 உதவித்தொகை, மாநகர பஸ்களில் இலவச பயணம், தொலைத்தூர பஸ்களின் பயண டிக்கெட்டில் 75 சதவீதம் தள்ளுபடி என தமிழக அரசு தாராளமனதுடன் சலுகைகளை வாரி வழங்குகிறது.

அதேப்போன்று மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் உதவி திட்டம், தீனதயாள் மறுவாழ்வு திட்டம், தேசிய கல்வி உதவித்தொகை என மத்திய அரசும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மத்திய-மாநில அரசுகளின் நலத்திட்டங்களால் தங்கள் வாழ்வில் ஏற்பட்டு வரும் மறுமலர்ச்சி குறித்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்:-

வேப்பந்தட்டை தாலுகா, மங்களமேட்டை சேர்ந்த அம்பிகாபதி:- ஊனமுற்றவர்களை மாற்றுத்திறனாளிகள் என்று அழைக்கக்கோரி உத்தரவிட்ட மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி. அவரால் தான் தற்போது ஊனமுற்றவர்களை மாற்றுத்திறனாளிகள் என்று அனைவரும் அழைத்து வருகிறார்கள், அதற்காக அவருக்கு அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். காட்டு வேலைக்கு சென்று வந்த நான், தற்போது நான் தையல் தொழிலாளியாக உள்ளேன். மேலும் விளையாட்டு வீராங்கனையான நான் தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கங்களை வென்றுள்ளேன். மாற்றுத்திறனாளியான நான் கேலி, கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறேன். அதையெல்லாம் பொருட்படுத்தாததால் தற்போது இந்த நிலைமைக்கு வந்துள்ளேன். தற்போது தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது வரவேற்கத்தக்கது. நம்மால் முடியும் என்று மாற்றுத்திறனாளிகள் வெளியே வந்தால் எதையும் சாதிக்க முடியும். மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து அலுவலகங்களிலும் தனியாக கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை கண்டறிந்து, அவர்களை ஊக்கப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தை பொறுத்தவரை மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் சிறப்பாக விளையாடி பதக்கங்களை வென்று வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு மற்ற விளையாட்டு வீரர்களை போல் ஊக்க தொகை, அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

ஊக்கப்படுத்தி வருகிறது

பெரம்பலூர் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி:- பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அவர்களுக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை, தமிழக மாற்றுத்திறனாளி நல வாரிய அட்டை பெற சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவ முகாமும் நடத்தப்படுகிறது. செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களையும் ஊக்கப்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகள் ஏதேனும் உதவிகள் தேவைப்படின் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

ரூ.ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது

பாலையூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி ரவீனா:- மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய அடையாள அட்டை வழங்கியிருந்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேபோல் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இருந்து பயனாளிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இது என்னைப் போன்ற பயனாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. என்னைப்போன்று பாதிக்கப்பட்ட மற்றொரு மாற்றுத்திறனாளிக்கு வருவாய்துறை மூலம் வழங்கக்கூடிய உதவித்தொகை ரூ.ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதனை தமிழக அரசு மாற்றி அமைத்து மாற்றுத்திறனாளி அலுவலகம் மற்றும் வருவாய் துறை மூலம் வழங்கக்கூடிய மாற்றுத் திரனாளிகள் உதவித்தொகை ஒரே மாதிரியாக அதாவது ரூ.2 ஆயிரமாக அறிவித்து வழங்க வேண்டும். மேலும் பஸ்களில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும்போது கண்டக்டர் அவர்களை இருக்கையில் அமர வைக்க வேண்டும்.

முக்கியத்துவம் இல்லை

குன்னத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மதியழகன்:- மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு 100 நாட்கள் வேலை உறுதி திட்டத்தில் 4 மணி நேரம் வேலை வழங்குவதாக அரசு கூறி இருந்தது. ஆனால் இத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முழுமையாக பணி வழங்கப்படுவது இல்லை. அதேபோல் இத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனவும் பல தலைவர்கள் நிராகரிக்கின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இல்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனத்தை முழுமையாக இலவசமாக வழங்க வேண்டும்.

மேலும் செய்திகள்