புதுக்கோட்டை
மாற்றுத்திறனாளிகளை மதிப்போம்
|இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம். சக மனிதர்களைப்போன்று அவர்கள் அனைத்து துறைகளிலும் தங்களது உரிமையை நிலைநாட்டுவதற்கு உந்துசக்தியாக 1992-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ந்தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
21 வகையானவர்கள்
கை, கால்கள் செயலிழப்பு, முடக்கம், பார்வைத்திறன் பாதிப்பு, செவித்திறன் குறைபாடு, மனநலம், தொழுநோய் என மாற்றுத்திறனாளிகள் 7 வகையாக பிரிக்கப்பட்டு இருந்தனர். 2017-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் அமலுக்கு வந்த பின்னர், நரம்பியல் நோய், ரத்தசோகை நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் அந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டனர். தற்போது மாற்றுத்திறனாளிகள் 21 வகைகளாக பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
உடலளவில் குறைபாடு உள்ளவர்களாக இருந்தாலும் மனதளவில் தன்னம்பிக்கை நிறைந்த மனிதர்களாக மாற்றுத்திறனாளிகள் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்து வருகிறார்கள். அவர்களை மதித்திடுவோம்.
அரசு திட்டங்கள்
மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை செலுத்தும்விதமாக மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் 10 வயதுக்கு மேற்பட்ட 10 லட்சத்து 11 ஆயிரத்து 323 மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு இந்த வாரியம் மூலம் கல்வி, திருமணம், மூக்குக்கண்ணாடி போன்றவற்றுக்கான உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவம், என்ஜினீயரிங் உயர்கல்வியில் 5 சதவீத இடஒதுக்கீடு, அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீத இடஒதுக்கீடு, குறுந்தொழில் தொடங்க ரூ.25 ஆயிரம் நிதி உதவி, மாதம் ரூ.2 ஆயிரம் பராமரிப்பு உதவித்தொகை, ரூ.1,000 உதவித்தொகை, மாநகர பஸ்களில் இலவச பயணம், தொலைத்தூர பஸ்களின் பயண டிக்கெட்டில் 75 சதவீதம் தள்ளுபடி என தமிழக அரசு தாராளமனதுடன் சலுகைகளை வாரி வழங்குகிறது.
அதேப்போன்று மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் உதவி திட்டம், தீனதயாள் மறுவாழ்வு திட்டம், தேசிய கல்வி உதவித்தொகை என மத்திய அரசும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மத்திய-மாநில அரசுகளின் நலத்திட்டங்களால் தங்கள் வாழ்வில் ஏற்பட்டு வரும் மறுமலர்ச்சி குறித்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்:-
சலுகை கிடைக்காமல் தவிப்பு
கறம்பக்குடி தென்னகர் பகுதியை சேர்ந்த தண்டாயுதபாணி:- மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு, உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. ஆனால் என்னை போன்ற கல்வியில் குறைந்தவர்கள், ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் பலர் எந்த சலுகைகளையும் பெறமுடியாத நிலையில்தான் உள்ளோம். குறிப்பிட்ட வயது வரை பெற்றோர் உதவியுடன் வளர்ந்து நடுத்தர வயதில் எந்த ஆதரவும் இன்றி, உடல் உழைப்பை தரமுடியாத நிலையில் பல மாற்றுத்திறனாளிகள் தவித்து வருகின்றனர். என்னைவிட குறைவாக பாதிக்கப்பட்ட பலர் பல்வேறு சலுகைகளை அனுபவிக்கின்றனர். போதிய கல்வி அறிவு, ஆதரவற்ற நிலை போன்ற காரணங்களால் பலர் எந்த உதவியும் கிடைக்காமல் உள்ளனர். இதுபோன்ற முரண்பாடுகள் களையப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான நலவாரிய உதவிகள் பலருக்கு கிடைப்பதில்லை.
அரசு வேலை
பொன்னமராவதி தாலுகா சூரப்பட்டியை சேர்ந்த சின்னத்துரை:- மத்திய, மாநில அரசுகள் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. நான் 85 சதவீதம் மாற்றுத்திறனாளியாக இருந்தும் உதவித்தொகை மற்றும் சலுகையை எப்படி பெற வேண்டும் என தெரியவில்லை. இதனால் மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை. என்னை போன்ற கிராமப்புற மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அரசே முன்வந்து உதவித்தொகை மற்றும் சலுகைகளை வழங்கினால் நன்றாக இருக்கும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைகளில் கூடுதல் சதவீதம் ஒதுக்க வேண்டும்.
உதவித்தொகை கிடைக்கவில்லை
கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த இமாமுதீன்:- நான் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு மூலம் மாதாமாதம் ரூ.1,000 உதவித்தொகை பெற்று வந்தேன். இந்த உதவித்தொகை ஒரு ஆண்டு தான் பெற்றேன். அதன் பின் எனக்கு உதவிதொகை கிடைக்கவே இல்லை. இது குறித்து மாவட்ட தாலுகா அலுவலகத்தில் பலமுறை ஆவணங்களை சமர்ப்பித்தும் எனக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை.
நலத்திட்ட உதவிகள்
புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி உலகநாதன்:- ''மாற்றுத்திறனாளிகளுக்கு பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நிதியுதவியும், அவர்களுக்கு 3 சக்கர மொபட், சக்கர நாற்காலிகள், காதொலி கருவி, பிரெய்லி கெடிகாரம், கண்கண்ணாடி உள்பட 20-க்கும் மேற்பட்ட உபகரணங்கள் வழங்கப்படுகிறது. திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. தனியார் துறை வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 6 ஆயிரத்து 310 பயனாளிகளுக்கு ரூ.8 கோடியே 86 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இலவச பஸ் பாஸ் 480 பேருக்கும், 75 சதவீத கட்டண சலுகை 1,313 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பயன்படுத்தும் வகையில் தனித்துவ மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்கப்படுகிறது. வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் நிலமற்ற வீட்டு மனைப்பட்டா வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.''
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பள்ளி, கல்லூரிகளில் சைகைமொழிப் பாடம்
உடல் ஊனமுற்றவர்கள், சமுதாயத்தில் ஏளனமாகப் பார்க்கப்பட்டனர். அவர்களின் மனவேதனையை உணர்ந்த அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி, அவர்களுக்கு மாற்றுத்திறனாளி என்று அடைமொழி கொடுத்து ஆதரவுக்கரம் நீட்டினார்.
சமூகநலத்துறையின் கீழ் இயங்கிவந்த மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை தனது கட்டுப்பாட்டில் அவர் வைத்திருந்தார். தற்போது கருணாநிதி வழியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை தன்வசம் வைத்துள்ளார்.
அவர் இந்த துறையை ஏற்றவுடன், 'மாற்றுத்திறனாளிகள் இணையற்ற ஆற்றல் பெற்றவர்கள். அவர்கள் முழுமையான ஆற்றலை வெளிப்படுத்தி தன்னம்பிக்கையுடனும், சுடர்விடும் அறிவுடனும் விளங்குவதற்கு இந்த துறை தன்னை அர்ப்பணித்து செயல்படும்' என்று உறுதி அளித்தார். அதன்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற ஜானகி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், 'பள்ளி, கல்லூரிகளில் சைகைமொழி பாடம் செயல்திட்டம் ஆக்கப்படும்' என்று அறிவித்திருப்பது மாற்றுத்திறனாளிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
மாற்றுத்திறனால் பத்மஸ்ரீ விருது பெற்றவர்
அமர் சேவா ராமகிருஷ்ணன் (வயது 69). ஓர் அற்புதமான மனிதநேயர். எந்திர துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர். கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்தபோது கடந்த 1974-ம் ஆண்டு பெங்களூரில் நடந்த கடற்படை அதிகாரிகளுக்கான உடல் தகுதி தேர்வில் கலந்து கொண்டார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்ததில் அவரது முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டு கழுத்துக்கு கீழ் உள்ள உடல் உறுப்புகள் செயல் இழந்தன. ஆனால் அவர் செயல் இழக்கவில்லை. மனம் தளரவில்லை.
கடந்த 1981-ம் ஆண்டு தென்காசி அருகே ஆய்க்குடியில் `அமர் சேவா சங்கம்' என்ற நிறுவனத்தை தொடங்கி மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளித்து வருகிறார்.
முதுகு தண்டுவடம் பாதித்தவர்கள் மற்றும் மற்றுத்திறனாளிகளுக்கு அங்கு சிகிச்சையும், அடைக்கலமும் அளிக்கப்படுகிறது. பல்வேறு தொழிற்கூடங்கள், பள்ளிகளையும் நடத்தி வருகிறார். அவரது சேவையை பாராட்டி சமீபத்தில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது.
உடல் உறுப்புகள் இயங்காவிட்டாலும் தனது மனவலிமையினால் இந்த பெரிய நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவருடன் அவரைப் போன்றே கை, கால்கள் செயல்படாத மாற்றுத்திறனாளியான சங்கரராமன் அந்த நிறுவனத்தில் செயலாளராக பணியாற்றி வருகிறார்.
மத்திய-மாநில அரசுகள் இந்த நிறுவனத்திற்கு அங்கீகாரம் வழங்கி உள்ளது. சமீபத்தில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இங்கு வந்து ஒரு கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார். அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தென்காசி பகுதிக்கு வரும்போது அமர் சேவா சங்கத்திற்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
உடலில் இருப்பது ஊனம் அல்ல என்பதற்கு அமர் சேவா ராமகிருஷ்ணன் ஒரு நல்ல உதாரணமாக விளங்குகிறார்.