< Back
மாநில செய்திகள்
மயிலாடுதுறை நகராட்சியுடன் 9 ஊராட்சி பகுதிகளை இணைக்க தீர்மானம்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

மயிலாடுதுறை நகராட்சியுடன் 9 ஊராட்சி பகுதிகளை இணைக்க தீர்மானம்

தினத்தந்தி
|
1 Jun 2022 10:30 PM IST

மயிலாடுதுறை நகராட்சியுடன் 9 ஊராட்சி பகுதிகளை இணைக்க நகரசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மயிலாடுதுறை:-

மயிலாடுதுறை நகராட்சியுடன் 9 ஊராட்சி பகுதிகளை இணைக்க நகரசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அவசர கூட்டம்

மயிலாடுதுறை நகரசபையின் அவசர கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நகர சபை தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சனல்குமார் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக ராஜகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அமைய உள்ள மன்னம்பந்தல் ஊராட்சியின் ஒரு சில பகுதிகள், புதிய பஸ் நிலையம் அமைய உள்ள மணக்குடி ஊராட்சியின் ஒருசில பகுதிகளை நகராட்சியுடன் இணைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஊராட்சி பகுதிகள் இணைப்பு

இதேபோல மயிலாடுதுறை ரூரல், வள்ளாலகரம், பட்டமங்கலம், நல்லத்துக்குடி, சித்தர்க்காடு, மாப்படுகை, திருவிழந்தூர் ஆகிய ஊராட்சிகளில் இருந்தும் ஒரு சில பகுதிகளை நகராட்சியுடன் இணைப்பது என ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:-

நடராஜன் (தி.மு.க.):- கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க. ஆட்சி காலம் முடியும் நேரத்தில் சில பகுதிகளை நகராட்சியுடன் இணைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு அது கிடப்பில் போடப்பட்டது. தற்போது தி.மு.க. ஆட்சியின் தொடக்க காலத்திலேயே இந்த தீர்மானம் கொண்டு வந்துள்ளதை வரவேற்கிறேன். இதை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

10 ஏக்கர் நிலம் வாங்குவது ஏன்?

காந்தி (பா.ம.க.):- புதிய பஸ் நிலையம் கட்ட 13 ஏக்கர் நிலம் கையகப்படுத்த முடிவெடுத்து முன்பணம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது 10 ஏக்கர் நிலத்தை மட்டும் வாங்குவது ஏன்?

ராஜகுமார் எம்.எல்.ஏ.:- 10 ஏக்கர் நிலத்தில் பஸ் நிலையம் அமைத்தால், அது 50 ஆண்டுகளுக்கு போதுமானது. தற்போது உள்ள நிதி நிலைமைக்கு ஏற்ப சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதனை உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ராஜகுமார் எம்.எல்.ஏ.:- மாவட்ட தலைநகரான மயிலாடுதுறை நகராட்சியை விரிவுபடுத்துவது அவசியம். அதற்கு ஏற்றவாறு ஊராட்சி பகுதிகள் இணைக்கப்படுகின்றன.

இவ்வாறு விவாதம் நடந்தது. முடிவில் நகரசபை துணைத்தலைவர் சிவகுமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்