< Back
மாநில செய்திகள்
துறைமங்கலம்-அரணாரை ஏரிகளில் படகு சவாரி அமைக்க நீர்ப்பாசன சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

துறைமங்கலம்-அரணாரை ஏரிகளில் படகு சவாரி அமைக்க நீர்ப்பாசன சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

தினத்தந்தி
|
25 Aug 2023 12:24 AM IST

துறைமங்கலம்-அரணாரை ஏரிகளில் படகு சவாரி அமைக்க வேண்டும் என நீர்ப்பாசன சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழு கூட்டம்

பெரம்பலூர், குரும்பலூர், செஞ்சேரி, அரணாரை, துறைமங்கலம் ஆகிய ஏரிகளின் நீர்ப்பாசன சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் அரணாரையில் நேற்று நடந்தது. இதற்கு சங்கத்தின் தலைவர் கண்ணபிரான் தலைமை தாங்கினார். நீர் வளத்துறையின் பெரம்பலூர் மருதையாறு வடிநில உபகோட்டத்தின் பெரம்பலூர் நகர் பாசன பிரிவின் உதவி பொறியாளர் மருதமுத்து, மருதையாறு வடிநில உபகோட்டத்தின் அணி திரட்டல் மற்றும் பயிற்சி நிபுணர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக மருதையாறு வடிநில உபகோட்டத்தின் உதவி செயற்பொறியாளர் சரவணன் கலந்து கொண்டு நீர்நிலைகளை பற்றி பேசினார். கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது பகுதிக்குட்பட்ட ஏரியின் தற்போதைய நிலைகளை எடுத்து கூறினர்.

படகு சவாரி

கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் நகரில் உள்ள முக்கிய பிரமுகர்கள், சமூக நல சங்கங்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரை கொண்டு பெரம்பலூர் நகரை மாசு இல்லாத நகரமாக மாற்றுவதற்கு ஒரு குழு அமைக்க வேண்டும். மாவட்ட தலைநகரமான பெரம்பலூருக்கு நீர்வளத்துறை புதிய கோட்ட அலுவலகம் அமைக்கவும், நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு அந்தந்த ஊராட்சி பகுதியில் அலுவலகம் அமைக்க வேண்டும். அரணாரை ஏரியில் உள்ள கருவேல மற்றும் சீமைக்கருவேல மரங்களை அகற்றியும், அதன் மதகு, பாசன வாய்க்கால்களை சீரமைத்தும், ஏரியில் படகு சவாரி செய்வதற்கான பணிகளை நீர்வளத்துறையினர் செய்து தர வேண்டும்.

பெரம்பலூர் மேலேரி எனப்படும் பெரிய ஏரிக்கு நீர் வரத்து வரும் வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும், ஏரியிலுள்ள கருவை மற்றும் சீமைக்கருவேல மரங்களையும் அகற்ற வேண்டும். கோனேரி ஆற்றில் கட்டப்படுகின்ற தடுப்பணையில் இருந்து வருகிற நீரானது ஜார்ஜ் வாய்க்கால் வழியாக அரணாரை ஏரிக்கு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருவேல மரங்களை அகற்ற வேண்டும்

பெரம்பலூர் கீழேரி எனப்படும் வெள்ளந்தாங்கியம்மன் ஏரியில் நடைபெறுகின்ற மராமத்து பணிகளை துரிதப்படுத்தி மழை காலத்திற்கு முன்பாக முடித்து தர வேண்டும். துறைமங்கலம் பெரிய ஏரியின் வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும், கிழக்கு கரையில் பொழுதுபோக்கு பூங்காவும், நடைப்பயிற்சி பாதை அமைக்கவும், அங்கு வருகின்ற பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் உணவகம் அமைக்கவும், ஏரியில் படகு சவாரி அமைத்து சுற்றுலா தலமாக்க வேண்டும்.

துறைமங்கலம் சிறிய ஏரியில் உள்ள கருவை மற்றும் சீமைக்கருவேல மரங்களை அகற்றியும், ஏரியின் வரத்து, பாசன வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக சங்கத்தின் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் மணி வரவேற்றார். முடிவில் மருதையாறு வடிநில உபகோட்டத்தின் கள ஒருங்கிணைப்பாளர் அம்பிகாபதி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்