காஞ்சிபுரம்
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் - 3-வது முறையாக நிறைவேற்றம்
|பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டத்தில் 3-வது முறைாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வளத்தூர், நெல்வாய், தண்டலம், மேல்படவூர், நாகப்பட்டு, ஏகனாபுரம், எடையார்பாக்கம், அக்கம்மாபுரம், குணகரம்பாக்கம், சிங்கிலி பாடி, மகாதேவிமங்கலம், உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 4,750 ஏக்கர் பரப்பளவில் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய மாநில அரசுகள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம், பரந்தூர், தண்டலம், நெல்வாய், மேலேறி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
குடியிருப்புகளையும் வாழ்வாதாரங்களையும் இழக்கும் கிராம மக்கள் கிராம சபை கூட்டங்களில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி கிராம சபை கூட்டத்திலும், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி கிராம சபை கூட்டத்திலும், விளைநிலங்களையும் குடியிருப்புகளையும் இழக்கும் கிராமமான ஏகனாபுரம் கிராம மக்கள் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2 முறை தீர்மானங்களை நிறைவேற்றி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம், ஏகனாபுரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி சரவணன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. துணை தலைவர் நித்யா கணபதி, துணை தாசில்தார் தண்டபாணி, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கிராம மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய மாநில அரசுகள் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்து கிராமசபை கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானத்தை 3-வது முறையாக நிறைவேற்றி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
கொட்டும் மழையிலும் 98- வது நாளாக பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பி தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.