அரியலூர்
புதிய சுரங்கம் வெட்ட எதிர்ப்பு; விவசாயிகள் 7 பேர் கைது
|புதிய சுரங்கம் வெட்ட எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம், ஆலத்தியூர் கிராமத்தில் ஒரு தனியார் சிமெண்டு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு சொந்தமான நிலம் புதுப்பாளையம் கிராமத்தில் உள்ளது. இந்த பகுதியில் விற்பனை செய்யப்படாத விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளும் மிக அருகில் உள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் சுண்ணாம்புகல் சுரங்கம் வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல் புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆண், பெண் என 7 விவசாயிகள் புதிய சுரங்கம் வெட்டுவதால் எங்களது விவசாய நிலத்தில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் வருவதில்லை. புழுதிகள் படிந்து பயிர்கள் சேதம் அடைகிறது. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த தளவாய் போலீசார் அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் கொண்டு வந்து அடைத்தனர். பின்னர் கைது செய்ததற்கான காவல் பதிவேட்டில் விவசாயிகள் கையெழுத்து போடாமலும், உணவு சாப்பிட மறுத்து எதிர்ப்பு தெரிவித்து உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து போலீசார் விவசாயிகள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அதன் பின்னர் மாலையில் அவர்களை சொந்த ஜாமீனில் விடுதலை செய்தனர்.