< Back
மாநில செய்திகள்
6 வழிச்சாலைக்கு எதிர்ப்பு; திருத்தம் செய்யப்பட்ட அடங்கல் நகல் வழங்கக்கோரி ஜமாபந்தியில் கோரிக்கைமனு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

6 வழிச்சாலைக்கு எதிர்ப்பு; திருத்தம் செய்யப்பட்ட அடங்கல் நகல் வழங்கக்கோரி ஜமாபந்தியில் கோரிக்கைமனு

தினத்தந்தி
|
8 Jun 2022 8:39 PM IST

6 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருத்தம் செய்யப்பட்ட அடங்கல் நகல் வழங்கக்கோரி ஜமாபந்தியில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி தொடங்கியது. தாசில்தார் ரமேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு தாசில்தார் லதா முன்னிலை வகித்தார். மாவட்ட வழங்கல் அலுவலர் ஜோதி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். வீட்டு மனைபட்டா, புதிய ரேஷன்கார்டு, முதியோர் உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம் கோரி பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.

இந்த நிலையில் பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை மத்திய நெடுஞ்சாலைத்துறை ரூ.3 அயிரத்து 200 கோடி செலவில் 136 கிலோ மீட்டர் தூரத்திற்கு 6 வழிச்சாலை அமைக்க உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உண்ணாவிரதம், தர்ணா, வீடுகள், கடைகளில் கருப்பு கொடி ஏற்றி வைத்து தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

ஊத்துக்கோட்டை தாலுகாவில் 6 வழிச்சாலை அமையவுள்ள பகுதிகளில் 1930-ம் ஆண்டு வரை விவசாயிகள் ஒரு போகம்தான் விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமான கோப்புகள் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கோப்புகளின் அடிப்படையில்தான் 6 வழிச்சாலைக்கு மத்திய நெடுஞ்சாலை துறை அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் 1960-ம் ஆண்டு்க்கு பிறகு வேளாண்துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக நவீன யுக்திகளை பயன்படுத்தி விவசாயிகள் ஆண்டுக்கு 3 போகங்கள் விவசாயம் செய்து வருகின்றனர். 3 போகங்கள் விளையக்கூடிய விளைநிலங்கள் வழியாக சாலை அமைக்க கூடாது என்று கோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. அதன்படி ஒரு போகம் விளையக்கூடிய நிலங்களின் அடங்கல் 1960-ம் ஆண்டு திருத்தம் செய்து 3 போகங்கள் என்று மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதிகாரிகள் 1930-ம் ஆண்டைய ஒரு போகம் விளையக்கூடிய அடங்கலை மத்திய நெடுஞ்சாலை துறைக்கு வழங்கியதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனிடையே 1960-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட அடங்கல் நகல் வழங்கக்கோரி மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் சம்பத், ஊத்துக்கோட்டை தாலுகா நன்செய் விவசாயிகள் சங்க தலைவர் குணசேகர்ரெட்டி, செயலாளர் சசிகுமார், ஒன்றிய கவுன்சிலர் ரவி ஆகியோர் தலைமையில் விவசாயிகள் நேற்று ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜோதியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதன் பின்னர் ஊத்துக்கோட்டை பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், துணைத்தலைவர் குமரவேல், வார்டு கவுன்சிலர்கள் கோகுலகிருஷ்ணன், கல்பனா பார்த்திபன், சுமலதாநரேஷ் ஆகியோர் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜோதியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:-

ஊத்துக்கோட்டையில் உள்ள பாசன கால்வாய்களை தூர்வார வேண்டும், பேரூராட்சிக்குட்பட்ட அம்பேத்கர்நகரில் சுமார் 40 வருடங்களுக்கு முன் வழங்கிய நிலப்பட்டாக்களை வரைமுறைப்படுத்த வேண்டும். ஏழைகளுக்கு நிலப் பட்டா வழங்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. ஜமாபந்தியில் உதவி தாசில்தார்கள் நடராஜன், வயலெட், பாரதி, ரவி, கந்தசாமி, கிராம நிர்வாக அலுவலர் யுகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்